மத்திய பாஜக அரசு வலுவான கட்சியாக காலூன்றியுள்ளது. 2014, 2019 மக்களவை தேர்தல்கள் என இரண்டு முறையும் மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளதுடன், பல்வேறு மாநிலங்களையும் பாஜக கைப்பற்றியுள்ளது. எதிர்வரவுள்ள 2024 மக்களவை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் சூளுரைத்துள்ளார். கடந்த இரண்டு முறை போன்று இல்லாமல், இயல்பாகவே மக்களிடம் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அரசு மீது ஏற்படும் அதிருப்தி உள்ளிட்டவைகளால் 2024 தேர்தல் பாஜவுக்கு சவால் நிறைந்ததாகவே இருக்கும் என தெரிகிறது.
பாஜகவை பொறுத்தவரை தேர்தல் உத்திகளை வகுத்து அடிமட்ட அளவு வரை சென்று தீவிரமாக பணியாற்றுபவர் அமித் ஷா. கடந்த இரண்டு தேர்தல்களிலும் மோடி என்ற இமேஜ் இருந்தாலும், பின்னணியில் அமித் ஷா ஆற்றிய களப்பணிகளே அக்கட்சியின் தொடர் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில், 2024ல் ஹாட்ரிக் வெற்றிக்கு 100 சதவீத பொறுப்பை அமித் ஷாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்துள்ளதாக தெரிகிறது. டெல்லியில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் 8 பேர் மீது அமித் ஷா காட்டிய கடினம் இதனை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. தங்கள் கடமையை செய்ய தவறும் அமைச்சர்கள் எச்சரிக்கப்பட வேண்டும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா விரும்பியதாக தெரிகிறது.
ஆறு மாநிலங்களில் உள்ள 85 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செல்வது உட்பட தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யாவிட்டால் அவர்கள் தங்கள் அமைச்சர் பதவிகளை இழக்க நேரிடும் என்று ஜே.பி.நட்டா எச்சரிக்கை விடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேசமயம், மூன்று சீனியர் மத்திய அமைச்சர்களை கட்சி பணிகளில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்று அமித் ஷா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறைந்தபட்சம் மூன்று முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களாவது அரசியல் ரீதியாகவும், தேர்தல் ரீதியாகவும், தார்மீக ரீதியாகவும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதையும் அமித் ஷா உறுதி செய்துள்ளார். மகாராஷ்டிராவில் சரத் பவாரின் பாராமதி தொகுதி, உத்தவ் தாக்ரேவின் கோட்டைகள் உடைக்கப்பட வேண்டும் என்றும், தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் அவரது மாநிலத்துக்குள்ளேயே முடக்கப்பட வேண்டும் என்றும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் அமித் ஷா தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, சரத் பவார், கே.சி.ஆர் ஆகியோரின் மகள்களான சுப்ரியா சுலே மற்றும் கவிதா ஆகியோரை வீழ்த்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை அமித் ஷா தேர்வு செய்துள்ளார். ஏனெனில் அவர்களது மகள்கள்தான் தீவிரமாக களப்பணியாற்றுவார்கள். இவர்களை ஒடுக்கினால், சரத் பவாரையும், கேசிஆரையும் ஒடுக்கி விடலாம் என்பது அமித் ஷாவின் கணக்காக இருக்கிறது. இது அவரது தலைசிறந்த உத்தியாக பார்க்கப்படுகிறது. அதேபோல், நரேந்திர சிங் தோமர், ஜோதிராதித்ய சிந்தியா, நிர்மலா சீதாராமன் ஆகிய அமைச்சர்களோடு அமித் ஷா வாரந்தோறும் உரையாடி வருகிறார்.
செப்டம்பர் 6 கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் கூறுகையில், அன்றைய தினம் அமித் ஷாவின் மற்றொரு முகம் முழுவதுமாக வெளிப்பட்டதாக கூறுகிறார். அமித் ஷாவை தாங்கள் அப்படி பார்ப்பது அதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிபெறவில்லை என்றால், பின்னடைவு ஏற்படும் என அமித் ஷா கருதுவதாகவும், இந்துத்துவா தோற்கடிக்கப்படுவதை பாஜக விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 2024இல் பாஜகவும் மோடியும் மீண்டும் ஆட்சிக்கு வருவதை உறுதி செய்யும் ஒரு மெகா செயல் திட்டம் அமித் ஷாவால் வகுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்டத்தின் போது அமித் ஷா காட்டிய கோபத்திற்கும், வேதனைக்கும் 2014, 2017, 2019, மற்றும் 2022 என கடந்த கால தேர்தல்களை நடத்தியதில் அவருக்கு ஏற்பட்ட அனுபவங்களே காரணம் என கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கடைசியாக ஜே.பி.நட்டா சமாதானப்படுத்தியதாக தெரிகிறது.
2024 மக்களவை தேர்தலுக்காக ஒரு வித்தியாசமான செயல்திட்டத்தை அமித் ஷா கொண்டுள்ளதாகவும், அதனை அவர் ரகசியமாக வைத்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது. தீபாவளிக்கு முன்பாக, இதேபோன்றதொரு உயர்மட்டக் கூட்டத்தை கொல்கத்தாவில் அமித் ஷா நடத்துவார் எனவும், அப்போது அம்மாநிலங்களில் தோல்வியடைந்த மக்களவைத் தொகுதிகளை மறுஆய்வு செய்வார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவுக்கு வடகிழக்கு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது. மேற்குவங்கத்தை பொறுத்தவரை அபிஷேக் பானர்ஜி தோற்கடிக்கப்பட வேண்டும் என்பதில் அமித் ஷா உறுதியாக இருக்கிறார்.
இதற்கு முன்பு பாஜக தோல்வியடைந்த 144 இடங்களில் குறைந்தபட்சம் 72 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கையும் அமித் ஷா நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது. “நீங்கள் அனைவரும் பல தேர்தல்களில் போட்டியிட்டு கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்த தலைவர்கள். எனவே, இது சாத்தியமான ஒன்றுதான்.” எனவும் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் இரண்டாம் கட்டம் அக்டோபர் மாதம் முதல் தொடங்கும் என கூறப்படுகிறது.