அஜய் தேவ்கன், சித்தார்த் மல்கோத்ரா மற்றும் ரகுல் ப்ரீத்சிங் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளிவர இருக்கும் படம் ‘தேங்க் காட்’. இந்த படத்தின் இயக்குநர் இந்திர குமார். இது இந்திய புராணம் ஒன்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நகைச்சுவை திரைப்படமாகும்.
இந்த திரைபடத்தில் அஜய் தேவ்கன் சித்ரகுப்தராக நடித்துள்ளார் (புராண கதையில் வரும் ஒரு இந்து கடவுள் … ஒவ்வொரு மனிதனின் கர்மாவின் அடிப்படையில், வெகுமதி மற்றும் தண்டனைகள் வழங்கும் கதாபாத்திரம்)… சித்தார்த்துக்கு மனைவியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ஒரு சில தினங்களுக்கு முன்பாக வெளிவந்த இந்த படத்தின் டிரைலர் இணையதளத்தில் பேசும் பொருளானது. இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தை குவைத்தின் தணிக்கை குழு அங்கு வெளியிட தடை விதித்துள்ளது. இதுபற்றிய பொழுதுபோக்கு இணைய முகப்பின் (portal) அறிக்கைப்படி, “இந்தப் படம் குவைத்தின் தணிக்கை குழுவின் எதிர்பார்பில் தேர்ச்சி பெறவில்லை. எனவே இந்தப் படம் குவைத்தில் தடைச்செய்யப்பட்டுள்ளது. ஆனால், துல்கர் சல்மான் மற்றும் சன்னி தியோலின் chup மற்றும் ராஷ்மிகா மந்தனா, அமித்தாப் பச்சன் இணைந்து நடித்திருக்கும் ‘குட்பைய்’ ஆகிய படங்கள் குவைத்தில் வெளியிட தேர்வு செய்யப்பட்டுள்ளது”.
முன்னதாக, இந்த படத்தின் டிரைலர் வந்த போது மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளதாக கர்நாடகாவை சேர்ந்த ஒரு அமைப்பினர் இந்த படத்துக்கு தடை விதிக்கக் கோரினர். இதுகுறித்து இந்து ஜனஜக்ருதி சமிதியின் செய்தி தொடர்பாளர் மோகன் கவுடா கூறுகையில், “ இந்த திரைபடத்தில் வரும் இந்து புராண கதையின் கதாபாத்திரங்களான சித்ரகுப்தர் மற்றும் எமனை கேலி செய்வதாக வரும் காட்சிகளைப் பொறுத்து கொள்ள முடியாது. இந்த படத்தை வெளியிட தணிக்கை குழு அனுமதி அளிக்கக்கூடாது. மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும் ‘தேங்க் காட்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும்” என்றார்.