சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
பொன்னியின் செல்வன் ரிலீஸை முன்னிட்டு படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர்.
பொன்னியின் செல்வன் படத்தில் ரஜினியை ஏன் நடிக்க வைக்கவில்லை என இயக்குநர் மணிரத்னம் மனம் திறந்துள்ளார்.
பரபரக்கும் பொன்னியின் செல்வன் ப்ரோமோஷன்
மணிரத்னம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதை அடுத்து, மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். நேற்று சென்னையில் நடைபெற்ற பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில், இயக்குநர் மணிரத்னம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது பொன்னியின் செல்வன் படம் உருவானது குறித்தும், அதில், நடித்த அனுபவம் பற்றியும் அவர்கள் மனம் திறந்தனர்.
பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் ரஜினி?
பொன்னியின் செல்வன் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா கடந்த 6ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், இயக்குநர் ஷங்கர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரஜினிகாந்த், “மணிரத்னம் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க எனக்கு ஆசை இருந்தது. பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்கிறேன் என மணியிடம் கேட்டிருந்தேன். சிறப்புத் தோற்றத்தில் ரஜினி நடிக்கிறார் என சொல்லிவிடலாம் எனக் கேட்டுப் பார்த்தேன். ஆனால், அவர் வேண்டாம் என மறுத்துவிட்டார்” எனக் கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் நடித்தால் சரியாக இருக்காது
பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டில் ரஜினி இப்படி ஓப்பனாக பேசியது பயங்கரமாக ட்ரெண்ட் ஆனது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் இயக்குநர் மணிரத்னம் இதுகுறித்து மனம் திறந்துள்ளார். அதில், “ரஜினிகாந்த் கேட்ட பாத்திரத்தில் அவர் நடித்து இருந்தால் கதையை மாற்ற வேண்டிய நிலைவரும். இது சரியாக இருக்காது, அதனால் தான் அவரை நடிக்க வைக்கவில்லை” என மணிரத்னம் கூறினார். இதனையடுத்து, பொன்னியின் செல்வனில் ரஜினி ஏன் நடிக்கவில்லை என்ற ரசிகர்களின் கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.
எல்லோரும் என்னை பாடாய்படுத்தினார்கள்
தொடர்ந்து பேசிய இயக்குநர் மணிரத்னம், “பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் நடிகர்கள் எல்லோரும் என்னை பாடாய் படுத்தினார்கள். நானும் அவர்களை பாடாய் படுத்தினேன். வசனங்களை ஜெயமோகன் சிறப்பாக எழுந்தியுள்ளார். கொரோனா காலத்தில் நடிகர்கள் குண்டாகி விடுவார்களோ? என்று பயந்தேன்” எனக் கூறினார். மேலும், பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம், அடுத்த 6 முதல் 9 மாதங்களுக்குள் வெளியாகும் எனவும் சர்ப்ரைஸ் அப்டேட்டை கொடுத்துள்ளார்.