தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள கரிவலம்வந்த நல்லூரை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் எஸ்.சி சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களுக்குத் தின்பண்டம் தரக்கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதாக பெட்டிக்கடை உரிமையாளர் ஒருவர் கூறும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டு கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாஞ்சாகுளத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் எஸ்.சி மாணவர்களை பெஞ்ச் மீது அமரவிடாமல் தரையில் உட்காரச் செய்கிறார்கள் என்பதும், அவர்கள் சத்துணவு சாப்பிட தட்டு தரப்படுவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், தேசிய ஆலோசனைக் குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கும், சாதிய பாகுபாடற்ற சூழலைப் பள்ளி வளாகங்களில் ஏற்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக ‘சாதிய பாகுபாடு’ இருப்பதை பாஞ்சாகுளம் சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.” என சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், கடந்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகளில் நிகழ்ந்த சாதிய பாகுபாடு தொடர்பான சம்பவங்களையும் தனது கடிதத்தில் அவர் பட்டியலிட்டுள்ளார்.
“இந்த சம்பவங்கள் வெளியே தெரியவந்தபோது அரசு தலையிட்டு நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது என்பது உண்மைதான். எனினும், பள்ளி வளாகங்களில் பாகுபாடு அற்ற நிலையை உருவாக்குவதற்கான உள்ளார்ந்த கட்டமைப்பு பள்ளிக்கல்வித் துறையில் தேவை. பாகுபாடுகள் குறித்து ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும்; மாணவர்களிடையே பாகுபாட்டு உணர்வுகளைக் களைவதற்குமான செயல்திட்டம் ஒன்றைப் பள்ளிக் கல்வித் துறையில் உருவாக்க வேண்டும்.” எனவும் ரவிக்குமார் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.
பள்ளிகளில் நிலவும் பாகுபாடுகள் களையப்படவேண்டும் என்பதற்காக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இருந்தபோது சோனியா காந்தி தலைமையில் செயல்பட்ட தேசிய ஆலோசனைக் குழு (National Advisory Council – NAC ) ஒரு துணைக்குழுவை அமைத்து சில பரிந்துரைகளை ஒன்றிய அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரைகள் மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்டன. ஆனால், தமிழ்நாட்டில் அப்போதிருந்த அதிமுக தலைமையிலான அரசு அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் தனது கடிதத்தில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தேசிய ஆலோசனைக் குழு அளித்துள்ள பரிந்துரைகளின் அம்சங்களான;
1. ஒன்றிய அரசின் கல்வித்துறை மாநில அரசுகளுடன் இணைந்து ’ கல்வி வளாகங்களில் நிலவும் பாகுபாடுகள் எவை’ என்பதை வரையறுத்தல்; சமத்துவப் பிரகடனம் ஒன்றை உருவாக்குதல்; பள்ளிகளுக்கான நடத்தை விதிகளைத் தயாரித்தல்; கல்வி வளாகங்களில் பன்மைத்துவத்தைப் பேணுவதற்கான கட்டமைப்பை உருவாக்குதல்
2. பாகுபாடுகளைக் களைவதற்கும் சமூக விலக்கம் மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் ஏதுவாக ஆசிரியர் கல்வியில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல்
3. பாகுபாடுகளை எதிர் விளைவு ஏற்படாமலும், விளம்பரமில்லாமலும் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் தீர்க்கும் வழிமுறைகளைக் கண்டறிதல், அதற்காகப் பள்ளி மேலாண்மைக் குழுவினருக்குப் பயிற்சியளித்தல்; பிரச்சனைகள் எழுந்தால் அவற்றைத் தீர்ப்பதில் உள்ளூர் சிவில் சமூகத்தை ஈடுபடுத்துதல்
4. நடைமுறையில் உள்ள பல வகையான பாகுபாடுகளை வரையறுக்க வேண்டும்; ஆசிரியர்களோ, பள்ளி ஊழியர்களோ விதிகளை மீறினால் பணி விதிகளின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். பள்ளிகளில் பாகுபாடுகள் குறித்த தகவல் வெளியானால் மாநில குழந்தைகள் உரிமை ஆணையம் தானே முன்வந்து விசாரணை மேற்கொள்ளவேண்டும்
என்பதை தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள ரவிக்குமார் எம்.பி., இந்தப் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கும், சாதிய பாகுபாடற்ற சூழலைப் பள்ளி வளாகங்களில் ஏற்படுத்துவதற்கும் உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை கடிதம் வாயிலாக கேட்டுக் கொண்டுள்ளார்.