அமெரிக்காவின் ஒமாஹா மெட்ரோ பகுதியில் உள்ள யுகா லெப்ஸில் பணியாற்றி வருபவர் சாம் கரி. சமீபத்தில் இவரது வங்கிக் கணக்கில் கூகுள் நிறுவனம் தவறுதலாக 2,50,000 டாலரை செலுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சாம் கரி தனது ட்விட்டர் பக்கத்தில், “கூகுள் நிறுவனம் எனக்கு 2,50,000 டாலரை அனுப்பியிருக்கிறது. இந்தத் தொகை என்னுடைய வங்கிக் கணக்கிற்கு வந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. ஆனால், இது தொடர்பாக எந்த அறிவிப்பையும் கூகுள் நிறுவனம் எனக்கு வழங்கவில்லை. எனவே இந்தப் பணம் தொடர்பாக கூகுள் நிறுவனத்துடன் தொடர்பு கொள்வதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? (கூகுள் நிறுவனத்திற்கு இந்தப் பணத்தை திரும்பப் பெற விருப்பமில்லை எனில் பரவாயில்லை நானே வைத்துக் கொள்கிறேன்)” எனப் பதிவிட்டு இருக்கிறார்.
சாம் கரி ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். அதனால் சில நேரங்களில் கூகுள் மென்பொருளில் உள்ள பிழைகளை கண்டறிய உதவியிருக்கிறார். அதற்காக சாம் காரிக்கு இந்தப் பணம் அனுப்பப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் இந்திய மதிப்பு 1.9 கோடி எனச் சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக சாம் காரி ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்தப் பேட்டியில், “இந்தப் பணம் என்னுடைய வங்கிக் கணக்கில் வந்து மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. எனக்கு இந்தப் பணம் தவறாக அனுப்பப்பட்டிருக்கலாம். இதை மீண்டும் கூகுள் கேட்கும் என எதிர்பார்ப்பதால் அதை நான் செலவழிக்காமல் வைத்திருக்கிறேன்.
ஆனால், அதை பயன்படுத்துவதற்கு முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது. இதுவரை கூகுள் எனக்கு எந்த சரியான பதிலையும் அளிக்கவில்லை. ஒரு வேலை இந்தப் பணம் கூகுளுக்கு தேவையில்லை என்றால், வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக, வேறு ஒரு வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்ற வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக கூகுள் செய்தித் தொடர்பாளர், “மனிதப் பிழையின் விளைவாக எங்கள் குழு சமீபத்தில் தவறான நபருக்கு பணம் செலுத்தியிருக்கிறது. பணம் செலுத்தப்பட்ட நபர் எங்களுக்கு விரைவாக தகவல் தெரிவித்ததை நாங்கள் பாராட்டுகிறோம். அதை சரி செய்ய நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அந்தப் பணத்தை விரைவில் திரும்பப் பெற்றுக்கொள்வோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.