சவுக்கு சங்கருக்கு ஒரு நீதி, குருமூர்த்திக்கு ஒரு நியாயமா?- கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!

பிரபல பத்திரிகையாளரும், யூடியூபருமான சவுக்கு சங்கருக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்துள்ளது சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

கடந்த ஜூலை 22ஆம் தேதி ”ஒட்டுமொத்த நீதித்துறையிலும் ஊழல் நிறைந்துள்ளது” என யூடியூப் சேனல் ஒன்றுக்கு கடந்த ஜூலை 22 ஆம் தேதி அளித்திருந்த நேர்காணலில் பகிரங்கமாக கூறியிருந்தார் சவுக்கு சங்கர். ஒட்டுமொத்த நீதித் துறையையே அதிர செய்த அவரது இந்த கருத்துக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து குற்றவியல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்திருந்தது.

இந்த வழக்கு விசாரணையின்போது அண்மையில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான சவுக்கு சங்கர், ஆமாம்… நான் அப்படிதான் கூறினேன்… என்று நீதித் துறை குறித்து தான் கூறிய கருத்தை பகிரங்கமாக ஒப்புக் கொண்டார். இதனையடுத்து, நீதித் துறை மீதே களங்கம் கற்பிக்கும் விதமாக ஊடகத்தில் பகிரங்கமாக கருத்து தெரிவித்த சவுக்கு சங்கருக்கு சவுக்கடி தருவது போல் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு.

சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்ட இந்த தண்டனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வருகின்றனர். குறிப்பாக, நாம் தமிழர் கட்சித் தவைவர் சீமான், ‘தனிநபர்களின் கருத்துக்களால் நீதித்துறையின் மாண்பு கெட்டுவிடும் என்பது நீதியல்ல; சவுக்கு சங்கருக்கான சிறைத்தண்டனை என்பது அதிகப்படியானது’ என்று அவருக்கு ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஆடிட்டரும், வலதுசாரி சிந்தனையாளராகவும் அறியப்படும் குருமூர்த்தி கடந்த ஆண்டு துக்ளக் இதழின் 51 ஆவது ஆண்டு விழாவில் நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அதில் அவர், ‘ தற்போது நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்லோரும் அரசியல்வாதிகளால் நியமிக்கப்பட்டவர்கள். யார் மூலமோ போய், யாருடைய காலையோ பிடித்துதான் நீதிபதிகளாக பல பேர் வந்திருக்கிறார்கள். இது இன்று நாம் மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம். தகுதியின் அடிப்படையில் நீதிபதிகள் வந்தால் இதுபோன்றதொரு நிலை இருக்காது’ என்று குருமூர்த்தி பகிரங்கமாக பேசியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு கடும் கண்டங்கள் எழுந்ததையடுத்து, தான் அவ்வாறு பேசியதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார் குருமூர்த்தி.

அவரது இந்த பேச்சை சுட்டிக்காட்டி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சவுக்கு சங்கருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ள நீதிமன்றம். இவ்வாறு நீதிபதிகள் நியமனம் குறித்தும், அவர்களின் தகுதி குறித்தும் விமர்சித்து மிகவும் மோசமாக பேசியுள்ள குருமூர்த்தியை சிறை அனுப்புமா? என்ற கேள்வி பல்வேறு தரப்பிலும் எழுப்பப்பட்டு வருகிறது.

எவ்வளவு கீழ்த்தரமாக பேச வேண்டுமோ பேசிவிட்டு, மன்னிப்பு கேட்டுவிட்டால் எல்லாம் சரியாகி விடுமா?, பிராமணனுக்கு ஒரு நீதி…சூத்திரனுக்கு ஒரு நீதியா? என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது,

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.