சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் சண்டிகர் பல்கலைக்கழகத்தின் மகளிர் விடுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் சக மாணவிகளின் அந்தரங்க வீடியோக்களை வெளியிட்ட விவகாரத்தால் அங்கு போராட்டமும் பெரும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் பல்கலைக்கழகத்தில் பல மாணவிகள் தற்கொலை செய்து கொண்டதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்திகளை போலீஸ் மறுத்துள்ளது.
இது தொடர்பாக மொஹாலி காவல்துறை தலைவர் விவேக் சோனி அளித்தப் பேட்டியில், “இதுவரை நாங்கள் மேற்கொண்ட சோதனையில், குற்றஞ்சாட்டப்பட்ட பெண்ணின் சுய வீடியோ ஒன்று மட்டுமே எங்களுக்குக் கிடைத்துள்ளது. அதுதவிர வேறு எந்த வீடியோக்களும் கிடைக்கவில்லை. கைதான மாணவியின் எலக்ட்ரானிக் சாதனங்கள், மொபைல் போன்கள் கையகப்படுத்தப்பட்டு தடயவியல் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக மாணவிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஆகையால் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஒரே ஒரு மாணவி பதற்றத்தால் மயங்கினார். அவரை மட்டுமே மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்” என்றார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.. இது ஒரு வெட்கக்கேடான சம்பவம் என்று குறிப்பிட்டுள்ள அவர் மக்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.