தமிழகத்தில் விளம்பு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு விவசாய நிலம் வாங்க 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைச்செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விளிம்புநிலை மக்களுக்கான பொருளாதார முன்னேற்றமே, அவர்களுக்கான சமூக நீதியாகஅமையும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடைய முதல்வர் ஸ்டாலினின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் 2022-2023-ம்ஆண்டுக்கான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்தின்போது அறிவித்ததாவது:
நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மக்கள் சமூக, பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில், அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரைமானியம் வழங்கப்படும். இத்திட்டம் மூலம் ரூ.10 கோடி மதிப்பில், 200 நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் பயன்பெறுவர். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.
இந்த உத்தரவை நடைமுறைப்படுத்த, தமிழக அரசு ரூ.10 கோடிநிதியை ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
விவசாயத்துக்கான இலவச மின் இணைப்பு பெறும் திட்டத்தின் கீழ், மின் வாரியம் மூலம் வழங்கப்படும் துரித மின் இணைப்புத் திட்டத்தில் செலுத்தப்பட வேண்டிய வைப்புத்தொகை, குதிரைத் திறனுக்கேற்ப ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் முதல்ரூ.4 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் 1,000 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, துரித மின் இணைப்புத் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற 90 சதவீத மானியம் (ரூ.2.25 லட்சம் முதல் ரூ.3.60 லட்சம் வரை) வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ரூ.23 கோடியே 37 லட்சம் செலவாகும்.
இந்த அறிவிப்பை நடைமுறைபடுத்தும் வகையில், 900 ஆதிதிராவிட விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.21 கோடியும், 100 பழங்குடியின விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.2 கோடியே 33 லட்சமும் 90 சதவீத மானியத் தொகையாக வழங்கப்படும். இதற்காக மொத்தம் ரூ.23 கோடியே37 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துஅரசாணை வெளியிடப்பட்டுள்ளது.