கைகுலுக்கலும் இல்லை… புன்னகைக்கவும் இல்லை! – அருகருகே இருந்தும் சீன அதிபரிடம் மோடி பேசாதது ஏன்?!

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) நாடுகளின் தலைவர்கள் பங்கேற்ற உச்சி மாநாடு உஸ்பெகிஸ்தான் நாட்டின் தலைநகர் சமர்கண்ட்டில் நடைபெற்றது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சுழற்சி முறையில் ஆண்டுக்கு ஒரு நாடு இந்த அமைப்புக்குத் தலைமை வகிக்கும். ஆண்டுதோறும் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டை, அந்த நாடு தலைமை வகித்து நடத்தும். அந்த வகையில், 22-வது உச்சி மாநாடு இப்போது நடந்து முடிந்திருக்கிறது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த உச்சி மாநாட்டில், பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் விரிவாக்கம், வர்த்தகம், பொருளாதாரம், கலாசாரம் மற்றும் சுற்றுலா ஆகிய அம்சங்களை தலைவர்கள் விவாதித்தனர்.

உச்சி மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மோடி, “உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய பொருளாதார மீட்டுருவாக்க சவால்களை எதிர்கொண்டுவரும்போது, இந்த அமைப்பின் பங்கு மிக முக்கியம் வாய்ந்ததாக மாறியுள்ளது. எஸ்.சி.ஓ உறுப்பு நாடுகள் உலக ஜி.டி.பி-யில் சுமார் 30 சதவிகிதத்தை பங்களிக்கின்றன. உலக மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேர் எஸ்.சி.ஓ நாடுகளில் வசிக்கின்றனர். எஸ்.சி.ஓ உறுப்பு நாடுகளுக்கு இடையே பெரும் ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. பெருந்தொற்று, உக்ரைன் பிரச்னை ஆகியவை உலக விநியோக சங்கிலியில் ஏராளமான தடைகளுக்கு காரணமாகியுள்ளன. இதன் காரணமாக உலகம் முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எரிசக்தி மற்றும் உணவு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது.

பிரதமர் மோடி

இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதில் நாங்கள் முன்னேற்றம் கண்டுள்ளோம். இந்தியாவின் இளம், திறமைமிக்க பணிப்படை இயல்பாகவே போட்டியை உருவாக்கி உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் இந்தாண்டு 7.5 சதவிகிதமாக வளர்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் அதிக வளர்ச்சியை கண்டுவரும் நாடு இந்தியாதான். மக்களை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரியில் தொழில்நுட்பத்தை முறையாக பயன்படுத்துவதற்கு பெருமளவில் கவனம் செலுத்தப்படுகிறது.

ஒவ்வொரு துறையிலும் புதுமையை நாங்கள் ஆதரித்து வருகிறோம். இன்று இந்தியாவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்டார்ட் அப்கள் உள்ளன. இதில் 100-க்கும் மேற்பட்டவை யுனிகான் நிறுவனங்கள், எங்கள் அனுபவம் இதர எஸ்.சி.ஓ நாடுகள் பலவற்றுக்கு பயனுள்ளதாக இருக்கும். உலகின் குறைந்த செலவிலான மருத்துவம் மற்றும் ஆரோக்கிய சுற்றுலாவுக்கான இடமாக இந்தியா உள்ளது. உலக சுகாதார அமைப்பின் பாரம்பர்ய மருந்துகளுக்கான உலக மையம் குஜராத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது. இது உலக சுகாதார அமைப்பின் முதலாவது மற்றும் ஒரே பாரம்பர்ய மருத்துவ மையமாகும். எஸ்.சி.ஓ நாடுகளுக்கு இடையே பாரம்பர்ய மருத்துவ ஒத்துழைப்பை நாம் அதிகரிக்க வேண்டும். இதற்காக பாரம்பர்ய மருத்துவம் குறித்த புதிய எஸ்.சி.ஓ பணிக்குழுவை அமைக்க இந்தியா முன்முயற்சி எடுக்கும்” என்று பேசினார்.

உச்சி மாநாடு

கொரோனா தொற்றுக்குப் பிறகு முதன்முறையாக தலைவர்கள் அனைவரும் நேரடியாக பங்கேற்கும் முதல் ஷாங்காய் மாநாடு என்பதால், இது முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்ட அறிக்கையின்படி, `உஸ்பெகிஸ்தானில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கும் ரஷ்ய அதிபர் புதினும், இந்திய பிரதமர் மோடியும் தனியாகச் சந்தித்துப் பேச உள்ளனர். ஆசிய பசிபிக் பிராந்திய பாதுகாப்பு, ஐநா மற்றும் ஜி-20 அமைப்புக்கு இடையேயான ஒத்துழைப்பு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் விவாதிப்பார்கள்’ என்று கூறப்பட்டது போலவே அவர்கள் சந்திப்பும் அமைந்தது. அந்த சந்திப்பில் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துகளையும் புதின் பகிர்ந்து கொண்டார். அதே நேரம், இந்த மாநாட்டில் பங்கேற்கும் சீன அதிபர் ஜின்பிங்கை மோடி சந்திக்கவில்லை. அதோடு மாநாட்டில் கலந்துகொண்ட தலைவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும்போது, மோடியும், ஜி ஜின்பிங்-கும் அருகருகே நின்றிருந்தும், இருவருமே ஒருவருக்கொருவர் யாரும் கைகுலுக்கவுமில்லை, புன்னகையைப் பரிமாறிக்கொள்ளவுமில்லை. இருப்பினும் அடுத்தாண்டு நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்பதற்கு சீனா வாழ்த்து தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SCO summit

“இரு நாட்டு தலைவர்களும் சந்திக்காததற்கு பல காரணங்கள் முன்வைக்கப்பட்டாலும். இரு நாட்டின் எல்லை பிரச்னைகளே முதன்மை காரணமாகச் சொல்லப்படுகிறது. அதோடு இந்தியாவின் பல கொள்கைகள் சீனாவுக்கு எதிரான அமெரிக்க கொள்கைகளுடன் ஒன்றுபட்டுள்ளது. எனவே இருவரும் சந்திப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லாமல் போயிருக்கலாம்” என்கிறார்கள் சர்வதேச அரசியலை உற்றுநோக்குபவர்கள்.

கடந்த 2020-ல் லடாக்கில் இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, இரு தரப்பு உறவில் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக லடாக் எல்லையில் இரு நாடுகளும் ராணுவத்தைக் குவித்தன. போர் பதற்றமும் உருவானது. எனினும், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, அங்கு நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. கிழக்கு லடாக்கின் முக்கிய முனைகளில் ஒன்றான கோக்ரா – ஹாட்ஸ்பிரிங்ஸ் பகுதியிலிருந்து இரு நாட்டு ராணுவமும் படைகளை திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, கடந்த 8-ம் தேதி முதல் படைகளை திரும்பப் பெறும் நடவடிக்கையை இருநாடுகளும் தொடங்கின என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.