பிரசவ வலியில் அரசு மருத்துவமனைக்கு வந்த பெண்ணிற்கு பிரசவம் பார்க்காமல், ஸ்கேன் எடுத்து வரச்சொல்லி அலைக்கழித்து விட்டு, பின்னர் வேறு மருத்துவமனைக்கு செல்லுங்கள் என்று கூறி அவதிக்குள்ளாக்கிய சம்பவம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் நடந்துள்ளது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் உமரி காடு பகுதியை சேர்ந்த கர்ப்பிணி துர்கா (வயது 21). இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் மருத்துவமனையில் ஸ்கேன் எடுத்து வருமாறு பிரசவ வலியிலும் அலைகழித்துள்ளனர். செவலியர்கள் அலட்சியம் காட்டியதுடன் சேர்த்து, இன்னும் ஒரு மணி நேரத்தில் குழந்தை பிறந்து விடும் என்று கூறி அப்பெண்ணை உடனே தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறியுள்ளனர்.
மேலும் ஆம்புலன்ஸ் வசதிகூட ஏற்படுத்தி தராமல் வேறு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறிய நிலையில், அந்த பிரசவ வலியில் மேலும் துடித்திருக்கிறார். தன் குழந்தையை காப்பாற்ற போராடிய அந்த கர்ப்பிணி, அருகிலிருந்தவர்களால் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். அந்த தனியார் மருத்துவமனையில், கர்ப்பிணி துர்காவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சம்பவம் குறித்து தகவலறிந்த தூத்துக்குடி மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் பொன் இசக்கி, நேரடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை சந்தித்து ஆறுதல் கூறி, மருத்துவரிடம் தாய் மற்றும் சேய் நலம் குறித்து விவரம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருச்செந்தூர் மருத்துவமனையில் துர்கா என்கிற கர்ப்பிணிக்கு நடந்த சம்பம் குறித்து, மருத்துவ வல்லுனர்கள் குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்படும். அதன்மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும். அந்த ஆய்வில் செவிலியர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தவறு மற்றும் குறைபாடுகள் எதுவும் இருந்தால் நிச்சயம் அவர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு மேல் இவ்வாறு நடக்காமல் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM