அதிமுக ஆட்சியில் அலைக்கழிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்திலே அனைத்தும் கிடைக்குமா?; மீண்டும் பீமாங் சென்டர்கள் வருமா: எதிர்பார்ப்பில் கிராமப்புற மக்கள்

உத்தமபாளையம்: திமுக ஆட்சியில் மக்கள் நலன்கருதி அறிமுகப்படுத்தப்பட்ட, ஏராளமான திட்டங்களை அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறுத்தி வைத்தனர். அதில், கர்ப்பிணிகளுக்காக செயல்படுத்தப்பட்ட திட்டங்களும் அடங்கும். எனவே, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம், ஸ்கேன் சென்டர், கர்ப்பக்கால சித்த மருத்துவ பெட்டகம் ஆகியவற்றை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உத்தமபாளையம் தாலுகா அளவில் தேவாரம், ராயப்பன்பட்டி, கூடலூர், க.புதுப்பட்டி, கோம்பை, காமயகவுண்டன்பட்டி உள்ளிட்ட இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இதேபோல் உத்தமபாளையம் தாலுகா அரசு மருத்துவமனையாகவும், சின்னமனூர் நகர்ப்புற அரசு மருத்துவமனையாகவும் செயல்படுகின்றன. இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது.

தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் பிரசவம் நடப்பதற்கு ‘பீமாங் சென்டர்கள்’ என்ற பெயரில் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டன. இங்கு பிரசவத்திற்கு என்றே பெண் டாக்டர்கள் நியமிக்கப்பட்டனர். திமுக ஆட்சிக்காலத்தில் கலைஞர் முதல்வராக இருந்த 2007ம் ஆண்டு காலகட்டத்தில் அனைத்து ஊர்களிலும் மெகா மருத்துவ முகாம்கள் நடந்தன.இதில் கர்ப்பிணிகளுக்கு பிரசவங்களை உள்ளூர் ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே பார்க்கும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. ஸ்கேன் வசதி, ரத்தப் பரிசோதனை, மாதந்தோறும் சத்து ஊசி, சிசு வளர்ச்சிக்கு என அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே சத்தான மாத்திரைகள் தரப்பட்டன. இதனால் எங்கும் செல்லவேண்டிய அலைச்சல் இல்லாத நிலை இருந்தது. இதே நிலைதான் அரசு மருத்துவமனைகளிலும் தொடர்ந்தது. இதனால் கர்ப்பிணிகள் மிக சந்தோஷம் அடைந்தனர்.

2011ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலம் தொடங்கி 2021ம் ஆண்டு வரை நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. காரணம் அனைத்து பிரசவங்களும் இப்போது சீமாங் சென்டர்களில் நடக்கிறது. தேனி மாவட்டத்தில் இப்போது அதிகமான பிரசவங்கள் சீமாங் சென்டர்கள் என அறிவிக்கப்பட்டுள்ள கம்பம், பெரியகுளம், அரசுமருத்துவமனைகளிலும், தேனி அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் நடக்கிறது. சுகப்பிரசவங்கள் கூட இப்போது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடக்காமல் பிரசவம் என்பது எட்டாக்கனியாகி விட்டது. இப்போது மாவட்டத்தில் 3 இடங்களில் மட்டும்தான் அதிகளவில் பிரசவங்கள் நடக்கிறது.

தேனி மருத்துவகல்லூரிக்கு எல்லா அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரக்கூடிய கர்ப்பிணிகளை அனுப்பி வைக்கின்றனர். சீமாங் சென்டர்களாக உள்ள கம்பம், பெரியகுளம் உள்ளிட்ட அரசுமருத்துவமனைகளிலும் கர்ப்பிணிகள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் கர்ப்பிணிகள் திண்டாடுகின்றனர். காரணம் கிராமங்கள், நகரங்கள் என எல்லா ஊர்களிலும் இருந்தும் கர்ப்பிணிகள் படையெடுக்கின்றனர். இதனால் சீமாங் சென்டர்களும் பிஷியாக உள்ளது.

எனவே மீண்டும் கர்ப்பிணிகளுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் நடக்க வேண்டும். பெருகிவரும் கர்ப்பிணிகளால் சீமாங் சென்டர்களாக உள்ள அரசு மருத்துவமனைகள் திண்டாடுகின்றன. எனவே உடனடியாக மீண்டும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிப்பது தொடர வேண்டும். இதற்கு தேனி மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.