பொன்னியின் செல்வனை இவ்வளவு நாள் எடுக்காமல் இருந்தது நல்லதுதான் – மணிரத்னம்

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, கார்த்தி, ஜெயராம், ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன் என பலர் நடித்திருக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்துக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். படம் வெளியாக இன்னும் சில நாள்களே இருப்பதால் படத்துக்கான ப்ரோமோஷன் பணிகள் வேகமெடுத்துள்ளன. அதன்படி படக்குழு செய்தியாளர்களை சந்தித்தது.

அப்போது பேசிய இயக்குநர் மணிரத்னம், “எம்.ஜி.ஆர்., சிவாஜி நடித்த வரலாற்று படங்களில் உபயோகப்படுத்தியிருக்கும் ஆபரணங்கள் கிரேக்க நாட்டு முறையை சார்ந்தவை. ஆனால், நான் நிறைய படித்து ஆராய்ச்சி செய்து தான் இப்படத்தில் உபயோகப் படுத்தி இருக்கிறேன்.  சண்டைக்கு செல்லும்போது ஆபரணங்கள் இருக்காது. உடைகளும் மெட்டல் இல்லாமல் தோல் உடைகள் தான் இருக்கும். அதன்படி தான் இப்படத்திலும் பயன்படுத்தி இருக்கிறேன். இப்படத்திற்கு வசனங்கள் முதலில் தூய தமிழில் தான் அமைக்க முடிவு செய்தோம். ஆனால், சரளமாக பேசமுடியவில்லை, உணர்வுகளையும் கொண்டுவர முடியவில்லை. எனவே, சுலபமாக பேசும் அளவிற்கு மாற்றிக் கொண்டோம். 

ஆனால், ஜெயமோகன் எழுதும்போது தூய தமிழில் தான் எழுதிக் கொடுத்தார். பொன்னியின் செல்வனை நானும் படித்திருக்கிறேன். அதிலிருந்து என்னுடைய விளக்கத்தை கூறி காட்சிப்படுத்தி இருக்கிறேன். படம் எடுக்கும் வரை இத்தனை நாட்களாக எல்லோரும் புத்தகத்தைப் படித்துவிட்டு எங்கு இருந்தார்களோ நானும் அங்கேதான் இருந்தேன்.

தளபதி படத்தில் வரும் ‘சுந்தரி கண்ணால் ஒரு செய்தி’ என்ற பாடலை இப்படத்திற்கு ஒரு டிரைலராக வைத்துக் கொள்ளலாம். பொன்னியின் செல்வனில் வரும் பூங்குழலியின் வேடத்தை தான் அந்த பாடலில் பயன்படுத்தி இருப்பேன். அதை தவிர என்னுடைய முந்தைய படங்களில் வேறு எதையும் நான் எடுக்கவில்லை. மாற்றங்கள் என ஏதும் இல்லை, முழு சுதந்திரம் கிடைத்தது போல் உள்ளது. ஒரே படத்தில் கதை சொல்ல வேண்டும் என்ற கட்டாயமில்லாமல் 2 பாகங்கள் எடுக்கலாம். அதை மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக உள்ளார்கள் என்பது வரவேற்கத்தக்கது.பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க அது வசதியாக அமைந்தது.

 இத்தனை வருடங்கள் எடுக்காமல் இருந்தது சரி என்று தோன்றுகிறது. இப்படத்திற்காக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும்போது ஒவ்வொருவரையும் இந்த பாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று நன்றாக யோசித்து தான் முடிவு செய்தேன். அது சரியாகவும் வந்திருக்கிறது. கல்கியின் இந்த கதைக்கு , ஜெயமோகன், குமரவேல் எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்து விட்டது. பின் தயாரிப்புப் பணிகள் மீதம் இருக்கிறது.

Trisha

மேலும், பல காட்சிகளை புத்தகத்தில் இருப்பது போல காட்சிப்படுத்த முடியாது. அதை புரிய வைக்கவும் முடியாது. ஆகையால், சினிமாவிற்கு ஏற்றபடி காட்சிகளை சுலபமாக அனைவரும் புரிந்து கொள்ளுமாறு அமைத்திருக்கிறேன். மணிரத்தினம் இப்படித்தான் படம் எடுப்பார் என்று என்னை பற்றி கணிக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும். அதிலிருந்து வெளியேற வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருக்கிறேன். 

ரஜினியை நடிக்க வைத்தால் கல்கி மற்றும் ரஜினி இரு ரசிகர்களிடமும் மாட்டி கொள்ள நேரிடும். ஆகையால் அவரை வேண்டாம் என்று கூறி விட்டேன். 20 வருடங்களுக்கு முன்பு எடுத்து இருந்தால் புரோமோஷானுக்கு கம்பங்களை தேடி கொண்டிருக்க வேண்டி இருக்கும்.ட்ரெய்லர் பார்த்ததும் முழு படத்தையும் கணிக்க கூடாது. முழு படத்தையும் பார்த்து விட்டு தான் நிறை குறைகளை கூற வேண்டும். அதை மீறி வரும் எதிர்மறை விமர்சனங்களை கண்டு கொள்ள மாட்டேன். த்ரிஷா நன்றாக தமிழ் பேசினார். அன்று நந்தினி பாத்திரத்திற்கு இந்தி ரேகா தான் சரியான தேர்வாக இருந்தார். இப்போது ஐஸ்வர்யா ராய் தான் சிறந்தவராக தோன்றினார்.

ஜெயமோகன் தமிழ் எளிமையாக இருக்கும்.. எளிதாக நடிக்க முடியும். சிறந்த contribution அவர். எழுத்தில் அனைத்தையும் சொல்ல முடியும். ஆனால் சினிமாவில் உடல் மொழி மற்றும் வசனங்களை வைத்துதான் ஒரு கதாபாத்திரத்தை கூற வேண்டும். அதை ஜெயமோகன் சிறப்பாக செய்தார். கொரோனா காலத்தில் நான் பயந்த ஒரே விஷயம் நடிகர் நடிகைகள் குண்டாகி விடுவார்களோ என்பதை பற்றி தான். உடற்பயிற்சி நிலையங்கள் இல்லை. அனால் அதற்கு அவரவர்கள் கடுமையாக உழைத்தாரக்ள். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.