தென்காசி மாவட்டம், பாஞ்சாகுளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அங்குள்ள கடையில் தின்பண்டம் கொடுக்க மறுக்கப்பட்டது. சாதிய பாகுபாடு காரணமாக நடந்த இந்தச் சம்பவம் பல்வேறு தரப்பினரிடமும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானது.
ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் பள்ளிச் சிறுவர்களுக்கு நடந்த இந்த அநீதி தொடர்பாக சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ சுப்புலட்சுமி தலைமையில் வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட கடைக்கு சீல் வைத்தனர். காவல்துறை சார்பாக 5 பேர்மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது. அதில், கடைக்காரர் மகேஸ்வரன், கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். முருகன், சுதா, குமார் ஆகிய மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த நிலையில், குற்றத்தில் ஈடுபட்டவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீஸார் தீவிரம் காட்டி வருவதால் அச்சம் அடைந்த கிராமத்தினர் நேற்று தென்காசி டி.எஸ்.பி அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள், ”நடந்த சம்பவத்துக்கும் கிராம மக்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. தவறு செய்தவர்கள்மீது நடவடிக்கை எடுக்க எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது” எனத் தெரிவித்தனர்.
பாஞ்சாகுளம் கிராமத்தில் சில காலமாகவே சாதிய மோதல்கள் ஏற்பட்டு வந்திருக்கின்றன. தற்போது பள்ளிச் சிறுவர்களிடம் சாதிய பாகுபாடு காட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், இத்தகையை குற்றங்களில் ஈடுபடுபவர்கள் கிராமத்துக்குள் நுழையத் தடை விதிக்க இருப்பதாக தென்மண்டல காவல்துறை ஐ.ஜி-யான ஆஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்களை சில காலத்துக்கு அந்த இடத்திலிருந்து வெளியேற்றும் வகையிலான சட்டப் பிரிவு, தீண்டாமை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் இருக்கிறது. பாஞ்சாகுளம் கிராமத்தில் சமூக ஒற்றுமையை சீர்குலைத்தவர்கள்மீது அந்தச் சட்டத்தைப் பயன்படுத்த முடிவு செய்திருக்கிறோம்.
அந்த கிராமத்தில் தொடர்ந்து பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் அந்த சட்டப்பிரிவை இந்த வழக்கில் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்த பின்னர், தேவைப்படும் காலம்வரை அந்த சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று காவல்துறை தென்மண்டல ஐ.ஜி ஆஸ்ரா கார்க் தெரிவித்தார்.