தமிழ்நாட்டின் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்கோட்டையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் அதிகமானோர் காய்ச்சலால் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகியுள்ளது. சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் காய்ச்சல் ஏற்படும் குழந்தைகளுக்கு போதிய படுக்கை இல்லை. பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை அரசு அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. எச்1என்1 வைரஸ் அதிவேகமாக பரவக்கூடியது. சுவாசக் குழாயை பாதிப்படையச் செய்யக் கூடிய வைரஸ்.
மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும். காய்ச்சலால் பொதுமக்கள், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பதற்றத்துடன் இருக்கக்கூடிய நிலை உள்ளது. தமிழகத்தில் மருந்துகள் தட்டுப்பாடாக உள்ளது. செவிலியர்களே மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் மருந்து, மாத்திரைகள் இல்லை, ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் இல்லை என தெரிவிக்கின்றனர். இந்தக் குற்றச்சாட்டை மறுப்பதை விடுத்து என்ன மாதிரியான தேவைகள் இருக்கிறதோ அதை செய்ய வேண்டும்.
மக்களின் நலம், குழந்தைகளின் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. அண்டை மாநிலமான புதுச்சேரியில்கூட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை தேவையில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். அக்கறையோடு இந்த விஷயத்தை அணுக வேண்டும் என்பதே எனது கோரிக்கை. காய்ச்சல் பரவுவதை மறைக்க வேண்டிய அவசியம் இல்லை. பன்றி காய்ச்சல், டெங்கு, இன்ஃப்ளுயன்சா உள்ளிட்ட பலவகையான காய்ச்சல்கள் பாதித்து வருவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கடந்த 8 ஆண்டு காலத்தில் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் 30 ஆயிரம் செவிலியர்கள், மருத்துவர்களை வெளிப்படையாக நியமனம் செய்யப்பட்டார்கள். அதே வேகத்தில் தற்போது பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும், தலைமை மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கென பிரத்யேகமாக சிறப்பு வார்டுகளை அமைக்க வேண்டும்.
குறிப்பாக குழந்தைகளுக்கு என காய்ச்சல் வார்டுகளை உடனடியாக அமைத்து அங்கு 24 மணி நேரமும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணியில் உள்ளார்களா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதே வார்டுகளில் ரத்த மாதிரிகளை உடனடியாக எடுத்து பரிசோதனை செய்யக்கூடிய கருவிகளையும் வைக்க வேண்டும். மேலும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 24 மணி நேரத்தில் என்ன மாதிரியான காய்ச்சல் வந்துள்ளது என்பதை கண்டறிந்து, சிகிச்சை அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு, எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மாதிரியான காய்ச்சல் பரவுகிறது, எந்த மாதிரியான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்பதை முடுக்கிவிட வேண்டும்” என்றார்.