வாஷிங்டன்: உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை உபயோகிப்பதை நிறுத்துமாறு ரஷ்ய அதிபர் புதினுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு ஜோ பைடன் அளித்த நேர்காணலில் பேசும்போது, “உக்ரைன் போரில் அணு ஆயுதங்களை உபயோகிப்பதை நிறுத்த வேண்டும் . இந்த உலகத்தில், ரஷ்யா நினைத்துப் பார்த்ததைவிட அவர்கள் நிராகரிக்கப்பட போகிறார்கள்” என்று தெரிவித்தார்.
உக்ரைனில், ரஷ்யா அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது குறித்து கூடுதல் தகவல் எதுவும் ஜோ பைடன் கூறவில்லை.
இந்த நிலையில், ரஷ்யாவை எதிர்த்து சண்டையிட சுமார் 60 மில்லியன் டாலரை உக்ரைனுக்கு வழங்க இருப்பதாக ஜோ பைடன் தலைமையிலான அரசு அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துவதாக ஐரோப்பிய நாடுகள் குற்றம் சுமத்தின. ஆனால் இந்த குற்றச்சாட்டை ரஷ்ய ராணுவம் மறுத்துள்ளது.
முன்னதாக, 6 மாதங்களாக உக்ரைன் – ரஷ்யா இடையே நடந்து வரும் போரில் சமீப நாட்களாக ரஷ்யா பின் தங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கார்கி உள்ளிட்ட பகுதிகள் மீண்டும் உக்ரைன் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
இந்த நிலையில் தங்கள் ராணுவ வீரர்கள் அழுத்தத்திற்கு உள்ளானால், இன்னும் பலமாக பதிலடி கொடுக்கப்படும் என்று புதின் சில நாட்களுக்கு முன்னர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.