இரட்டைமலை சீனிவாசனின் 77-வது நினைவு தினத்தை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காந்தி மண்டபத்தில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அம்பேத்கருக்கு முன்பே சமூக நீதிக்காக, சமத்துவ சமூகத்திற்காக போராடியவர் இரட்டைமலை சீனிவாசன். இந்தியாவுக்கு வெளியே காந்தியும், அம்பேத்கரும்தான் நமக்கான அடையாளங்கள். அதனால் மத்திய அரசு கட்டிவரும் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு புரட்சியாளர் அம்பேத்கரின் பெயரை சூட்டவேண்டும்.
தென்காசியில் நடந்த தீண்டாமை சம்பவம் குறித்து, பெரியார் மண் சமூகநீதி பற்றிப் பேசுவோரிடம் கேள்வி கேட்க வேண்டும். இந்தச் சம்பவம் ஒரு படிப்பினை. சாதி என்னும் நஞ்சு நமது மனதில் பரவாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். நான் சிறுவயதிலிருந்தே பெரியாரின் கருத்துகளில் பயணித்தவன். உலகத் தலைவராக பெரியாரை நிறுத்துவதில் எனக்கும் மகிழ்ச்சிதான். இதைப்போல் மாணவர்களுக்கு காலை உணவு அளித்து படிக்க வைப்பதை நான் வரவேற்கிறேன். ஆனால் அரசியல் லாபத்திற்காக செய்வதை வெறுக்கிறேன். காமராஜர் சத்துணவு அளித்தது, உளமார செய்தது. ஆனால் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சியில் உணவிலேயே கைகளை கழுவினார்.
இது வெறும் விளம்பரம்தான். ஆனால், குழந்தைகளுக்கு வழங்கப்படும் காலை உணவு திட்டத்தின் தரம் அனைவரும் சாப்பிடும் வகையில் இருக்க வேண்டும். இந்து மதம் பற்றி ஆ.ராசா பல ஆண்டுகளாக மனுதர்மத்தில் இருப்பதைத்தான் எடுத்து அனைவருக்கும் தெரிவித்திருக்கிறார்.
இதனை ஆ.ராசாவின் கருத்தாக திரிக்கிறார்கள். அனைவருக்கும் சேர்த்துதான் அவர் பேசியுள்ளார். இதனை பெரியார் பல்வேறு மேடைகளில் பல ஆண்டுகளாக பேசியுள்ளார். ஆ.ராசாவுக்கு ஆதரவாக தி.மு.க நிற்குமா என்பது தெரியாது. ஆனால் நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் எப்போதும் இருப்போம்” என்றார்.