தி.மு.க-வின் துணைப் பொதுச்செயலாளரும், நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ஆ.ராசா இந்துக்கள் குறித்து பேசியிருப்பது பல அமைப்பினர் மத்தியில் கடும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பா.ஜ.க-வினரும், இந்து முன்னணியினரும் ஆ.ராசா மீது வழக்கு பதிவுசெய்து, அவரைக் கைதுசெய்ய வேண்டும் எனக் கூறி போலீஸில் புகாரளித்தும், கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தியும் வருகிறார்கள். அந்த வகையில், ஆ.ராசாவைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகரில் பழைய பேருந்து நிலையம் அருகே இந்து முன்னணி அமைப்பினர் போஸ்டர் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்தப் போஸ்டர்களில், “திமுக அரசே… சாமி கும்பிடும் இந்துக்களை விபச்சாரி மகன் என்று கூறிய ஆ.ராசாவை கைது செய், இந்துமத வெறுப்பு அரசியல் செய்யும் ஆ.ராசாவின் எம்.பி., பதவியைப் பறி” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த், அவரது வாகன ஓட்டுநர் காவலர் பாண்டி ஆகியோர் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதைத் தடுத்து நிறுத்தி போஸ்டரை பிடுங்கியதாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து அங்கிருந்து ஆய்வாளர் தனது வாகனத்தில் எட்டயபுரம் சாலையில் உள்ள வ.உ.சி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த பா.ஜ.க நகரத் தலைவர் சீனிவாசன் தலைமையிலான பா.ஜ.க-வினர் சிலர், ஆய்வாளரின் வாகனத்தை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீஸ் வாகனத்திலிருந்து இறங்கிய ஆய்வாளர் சுஜித் ஆனந்திடம், “போஸ்டரை ஏன் பிடுங்கினாய்? உனக்கு அவ்வளவு திமிரா?” எனச் சொல்லி பா.ஜ.க-வின் நகர தலைவர் சீனிவாசன், பா.ஜ.க நிர்வாகி ரகு பாபு உள்ளிட்ட சிலர் ஆய்வாளரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.
இதனை தடுக்க முயன்ற காவலர் பாண்டியையும் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். காயமடைந்த ஆய்வாளர் சுஜித் ஆனந்த், காவலர் பாண்டி ஆகியோர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் உள் நோயாளி பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க நகர தலைவர் சீனிவாசன், ரகு பாபு, இந்து முன்னணி நகர அமைப்பாளர் சீனிவாசன் உட்பட 4 பேரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க கோவில்பட்டி நகர் முழுவதும் பாதுகாப்பிற்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.