நடிகர்கள்: குஞ்சாக்கா போபன், காயத்ரி, ராஜேஷ் மாதவன், குன்னி கிருஷ்ணன்
திரைக்கதை இயக்கம்: ரத்தீஷ் பொடுவல்
இசை: டான் வின்சென்ட்
கேமரா: ராகேஷ் ஹரிதாஸ்
சாதாரணமாக தன்னை நாய்கள் கடித்ததற்கு அமைச்சரை கோர்டு கூண்டில் ஏற்று பழைய திருடன் கதை நகைச்சுவையாக எடுக்கப்பட்டுள்ளது.
மலையாளப்படத்திற்கே உரிய அரசியல் குறும்புடன் நகைச்சுவை காட்சிகளுடன் நகர்கிறது படம்.
படத்தில் நடித்த அனைத்து பாத்திரங்களும் குறிப்பாக மாஜிஸ்ட்ரேட் வேடத்தில் நடிப்பவர் நகைச்சுவையில் கலக்குகிறார்.
ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் இயக்குநரின் மற்றுமொரு நகைச்சுவை படம்
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் “நா தான் கேஸ் கொடு”. சாதாரண எளிய மனிதன் நீதிமன்றத்தில் கொண்டு வரும் பிரச்சினை மாநில அமைச்சரையே அலற வைக்கும் மாறிபோவதை நகைச்சுவையுடன் கூறியுள்ளனர். மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நடக்கும் விசாரணை படம் முழுவதும் வந்தாலும் நகைச்சுவையுடன் சுவாரஸ்யம் குறையாக கொண்டுச் செல்வது சிறப்பான ஒன்று. தமிழில் கூகுள் குட்டப்பா என்று வெளியான படம் மலையாளத்தில் வெளியாகி சக்கைப்போடு போட்ட ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தின் தழுவல். இதை எழுதி இயக்கியவர் ரத்தீஷ். அவரது இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் “நா தான் கேஸ் கொடு”. படம் ஆரம்பம் முதல் இறுதிவரை நகைச்சுவையுடன் சமூக விஷயங்களை கலந்து ஓடுகிறது. படம் ஆரம்பம் முதல் கடைசி வரை கட்டிப்போட்டு வைக்கிறார் இயக்குநரும் கதாசிரியருமான ரத்தீஷ்
படத்தின் கதை இதுதான்
குஞ்சாக்கோ போபன் பல படங்களில் நடித்துள்ளார். நய்யாட்டு படத்தில் போலீஸாக் ஜோஜு ஜார்ஜுடன் நடித்திருப்பார். அவரா இவர் என அடையாளம் காண முடியாத அளவுக்கு இந்தப்படத்தில் கேரக்டராக வாழ்ந்துள்ளார். படத்தில் சிறிய சிறிய திருட்டுகளில் ஈடுபடும் ஹீரோ ராஜீவன் (குஞ்சாக்கோ போபன்) ஒரு திருட்டின்போது தப்பித்து ஒரு கிராமத்தில் தஞ்சமடைகிறார். அங்கு ஒரு தமிழ் குடும்பத்தில் கைகால் செயலிழந்த தந்தையுடன் வசிக்கும் தமிழ் பெண் காயத்ரியை விரும்பி அங்கேயே தங்கி விடுகிறார்.
சுவர் ஏறி குதித்ததால் நாய்க்கடி
ஊர் திருவிழா நேரத்தில் ஆளுங்கட்சி கூட்டணியில் இருக்கும் எம்.எல்.ஏ வீட்டில் சுவர் ஏறி குதிக்க அங்குள்ள இரண்டு நாய்களிடம் கடுமையாக தொடை, புட்டத்தில் கடி வாங்கி பொதுமக்களால் போலீஸில் பிடித்து கொடுக்கப்படுகிறார். அதன் பிறகுதான் ஆரம்பிக்கிறது அமர்க்களம். மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் நிறுத்தப்பட்ட அவர் மீது இரண்டு செக்ஷன்கள் போட்டு போலீஸ் ரிமாண்ட் கேட்க தான் அங்கு திருட போகவில்லை, தவிரவும் போட்டிருக்கும் செக்ஷனும் தவறு என ஜாமீன் கேட்கிறார் ரஜீவன்.
வழக்கில் புதிய திருப்பம்
மாஜிஸ்ட்ரேட் ஆச்சர்யப்பட்டு உனக்கு சட்டம் கூட தெரியுமா எனக்கேட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கிறார். ஆனால் ஊரே அவரை திருடனாக பார்க்கிறது, காதலி வெறுத்து ஒதுக்குகிறார். இதனால் மீண்டும் மாஜிஸ்ட்ரேட் முன் வந்து நிற்கிறார் ரஜீவன். மாஜிஸ்ட்ரேட் உன்னி இந்தப்படத்தின் இன்னொரு கதாநாயகன் எனும் அளவுக்கு நடித்துள்ளார். தான் திருடன் இல்லை தான் எம்.எல்.ஏ வீட்டு சுவரேறி குதித்ததற்கு ஒரு ஆட்டோ என்னை இடிக்க வந்தது தான் காரணம் என புதிய மனுவை அளிக்க போலீஸை விசாரிக்க சொல்கிறார் மாஜிஸ்ட்ரேட் உன்னி.
அடுத்தடுத்த நகைச்சுவை திருப்பங்கள்
படத்தின் நாயகனாக நடித்திருக்கும் குஞ்சாக்கோ போபன், காயம்பட்ட தனது கால்களை வைத்துக் கொண்டு, வழக்கை சொந்தமாக நடத்தி போராடும் பாத்திரத்தில் அப்படியே பொறுந்தி நடித்துள்ளார். மாஜிஸ்ட்ரேட்டின் நம்பிக்கையை அவர் பெறுவதும், மாஜிஸ்ட்ரேட் எச்சரிக்கை கொடுத்தாலும் சட்டத்தில் ராஜீவனுக்கு உள்ள உரிமையைஅ மதித்து அவர் பேச்சை கேட்டு அனுமதிக்க கடைசியில் தன்னை நாய்க்கடிக்க காரணம் ஆட்டோ மோதியது, அதற்கு காரணம் ஒரு வேன் ஆட்டோ மீது மோதியது, அதற்கு காரணம் சாலையில் உள்ள பள்ளம், அதற்கு காரணம் பொதுப்பணித்துறை அமைச்சர் என கேஸ் கொடுக்கிறார்.
மாநில அளவில் பிரபலமாகும் சாதாரண நாய்க்கடி பிரச்சினை
அதைக்கேட்டு மிரண்டுப்போன மாஜிஸ்ட்ரேட் ” ராஜீவா அதற்கு முதலமைச்சர் அனுமதி கொடுக்கணும் தெரியுமான்னு” உசுப்பேற்றி அனுப்ப முதல்வரிடம் அவர் அனுமதி வாங்க ராஜிவனை நாய்க்கடித்த பிரச்சினை மாநில அளவிலான பிரச்சினையாக மாறுகிறது. பிபிசி வந்து கவர் செய்யும் அளவுக்கு புகழ் பெறுகிறார் ராஜீவன். இதில் சிறப்பு என்னவென்றால் கோர்ட் காட்சிகள், சாட்சி விசாரணை அனைத்தையும் குற்றவாளி ராஜீவன் தானே வாதாடுவது நகைச்சுவையாக இருக்கும். அதை விட மாஜிஸ்ட்ரேட் உன்னி கண்ணாடியை கீழிறக்கி பார்ப்பது, அமைச்சரை கலாய்ப்பது, சைகையாலேயே ஆர்டர் போடுவது, இடையிடையே புறாக்களை விரட்டுவது என தனி நகைச்சுவை ராஜ்ஜியம் நடத்தியிருப்பார். ராஜீவன் அதிகாரத்துக்கு எதிராக போராடி தன்னை நாய் கடித்ததற்கு அமைச்சர் தான் காரணம் என்பதை நிரூபித்தாரா என்பதே மீதிக்கதை. கதையின் முடிவிலும் ஒரு ட்விஸ்ட். இந்தப்படம் சாமானியன் சட்டத்தை கையில் எடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நகைச்சுவையுடன் விளக்கியுள்ளது.
படத்தின் பிளஸ்
படத்தின் பிளஸ் கோர்ட் சீன்கள், சிறிய கதையை வலுவான நகைச்சுவை காட்சியுடன் படமாக்க முடியும் என்பதை இயக்குநர் நிரூபித்துள்ளது. படத்தில் ஒவ்வொருவரும் அவரவர் பாத்திரத்தில் கலக்குகிறார்கள். ஆட்டோ ஓட்டுநர், அவரது டீச்சர் காதலி இருவரும் செய்யும் சேட்டைகள் தனி ரகம். போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள், மாஜிஸ்ட்ரேட் உன்னி வரும் காட்சிகள். ராஜீவா என அவர் அழைப்பது, அமைச்சரை எழுந்து நிற்க வைத்து விசாரிப்பது, என படம் முழுவதும் ஜொலிக்கிறார். படம் வேகமாக அடுத்து என்ன பிரச்சினையை ராஜீவன் கொண்டுவர போகிறாரோ எனும் எதிர்ப்பார்ப்பில் நகருவது அருமை.
படத்தின் மைனஸ்
ஆரம்ப காட்சிகள் முதல் அரைமணி நேரம் படம் மெதுவாக நகர்கிறது. கோர்ட் காட்சிகள் வரும்வரை படம் வேகமெடுக்க வில்லை இதனால் படத்தை ஓடிடி தளத்தில் பார்ப்பவர்கள் ஆரம்பத்திலேயே சலித்துபோய் ஆஃப் செய்யவும் வாய்ப்புள்ளது. ஆனால் அதன் பின்னர் படம் வேகம் எடுக்கிறது. முதல் 30 நிமிடங்கள் இழுவையை சற்று மெருகு கூட்டியிருக்கலாம்.
சுவார்ஸ்யமான காட்சிகள்
படத்தில் பல காட்சிகள் சீரியசாக படம் நகரும்போது அவ்வப்போது நுணுக்கமாக நகைச்சுவைக்காக வைக்கப்பட்டுள்ளது. காந்தி சிலையை பல கோணங்களில் அவ்வப்போது காட்டுவதும், நீதிமன்ற வளாகத்தில் புறாக்களின் அட்டகாசத்தை மாஜிஸ்ட்ரேட் கண்காணித்துக்கொண்டே இருப்பதும், அவ்வப்போது கல்லைவிட்டு எரிவதும் நகைச்சுவையாக இருக்கும். 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் வழக்கில் ஆண்டுகளை காட்டும்போதே கூடவே பெட்ரோல் விலையேற்றத்தை காட்டுவதில் இயக்குநரின் குசும்பு வெளிப்படுகிறது. படம் பார்த்து முடித்தால் நல்ல நகைச்சுவை கதையை பார்த்த திருப்தி இருக்கும்.