2வது திருமணம் செய்த கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்த மனைவி; மின்கம்பத்தில் கட்டிவைத்து சரமாரி தாக்குதல்

திருமலை: தன்னை விட்டு பிரிந்து 2வது திருமணம் செய்த கணவரை அவரது முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரி தாக்கி செருப்பு மாலை அணிவித்தார். தெலங்கானா மாநிலம், பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (28). இவருக்கும் காந்த் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகிலாவின் பெற்றோர் காந்த்க்கு வரதட்சணையாக ₹20 லட்சம் கொடுத்தனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அதன்பிறகு காந்த் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். பின்னர், வாரங்கல்லில் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு ஹன்மகொண்டாவில் வசித்து வருகிறார்.

இதையறிந்த அகிலா நேற்று தனது உறவினர்களுடன் ஹன்மகொண்டா சென்று காந்த்தை ஸ்வர்ணபள்ளிக்கு  அழைத்து வந்தார். பின்னர், காந்த்தை அங்குள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினார். பின்னர் செருப்பை மாலைபோல் அணிவித்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் காந்த்தை மீட்டனர். அகிலா கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.