பொன்னியின் செல்வன்-1 படத்திற்காக நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நடிகை திரிஷா, “6 மாதங்களாக வீட்டுப் பாடம் செய்து பல பார்வைகளை சோதித்து பார்த்தோம். இறுதியில் குந்தவைக்கு இதுதான் சரியாக இருக்கும் என்று வடிகட்டி கொண்டே வந்தோம்.
வசனங்களை படித்ததும் வாயில் நுழையவில்லை. நிறைய ஒத்திகை செய்தேன். வசனங்களை சரியாக உச்சரிப்பதற்கு மணி சார் மிகவும் உறுதுணையாக இருந்தார். முதல் நாள் படப்பிடிப்பிலேயே நானும் ஐசும் (ஐஸ்வர்யா ராய்) சேர்ந்த காட்சிகளை எடுத்தார்கள். அப்போதே நாங்கள் நன்றாக பேச ஆரம்பித்து விட்டோம். ஆனால், மணி சார் நீங்கள் இருவரும் இந்த அளவிற்கு நட்பாக இருக்க கூடாது. காட்சிகள் சரியாக வராது என்று கூறினார்.
முழு உடைகள் இருக்கும், நகைகள் நிறைய இருக்கும், நடிக்கும் போது பெரிதாக இருக்காது. ஆனால், ஓய்வு எடுக்கும் போது பெரும் சவாலாக இருந்தது. அதிக எடையால் காது வலிக்கும். தண்ணீர் குடிக்க முடியாது. இப்படத்திலும் ரொமான்ஸ் காட்சிகள் இருக்கிறது. ஆனால், ஒரு பாத்திரம் ஐகானிக் ஆகுமா என்பதை படம் வெளியாகி அனைவரும் கூறும் போது தான் தெரியும்.
இப்படத்தில் ஆண்களும் பெண்களுக்கு இணையாக ஒப்பனை செய்ய அதிக நேரம் ஆனது. காலை 7 மணி படப்பிடிப்பிற்காக அனைவரும் அதிகாலை 2.30 மணிக்கே ஒப்பனை செய்ய ஆரம்பித்து விடுவோம்” என்றார்.
– ஜான்சன்