கோவை மாவட்டத்துக்கு மூன்று நாள்கள் பயணமாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வருகை புரிந்திருந்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டு நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும், கோவை மாவட்டத்தில் மய்யத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டும் பணிகளில் தற்போது கமல் தீவிரமாக களமாடி வருகிறார்.
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் மய்யம் மகளிர் சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நேற்று (செப்டம்பர்-17) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் தடம் பதித்த பெண்களுக்கு கமல்ஹாசன் விருதுகளை வழங்கிப் பாராட்டினார். அப்போது பேசிய அவர், “நான் இரண்டு முறை புடவைக் கட்டி பெண்ணாக நடித்திருக்கிறேன். பெண்ணின் குணாதிசியங்கள் எனக்கு நல்லா தெரியும். பெண்கள் செய்யும் பல விஷயங்களை ஆண்களால் செய்யமுடியாது. அதனால், பெண்ணாக பிறப்பதற்கு பெருமைப்பட வேண்டும்.
நாம் அனைவருமே `நான் சொன்னா என்ன ஆக போகுது, என்ன மாற போகுது’ எனப் புலம்பிக் கொண்டிருக்காமல், மாற்றத்தை நம்மிடமிருந்து தொடங்க வேண்டும். காந்தி வந்தவுடன் சுதந்திரம் கிடைக்கவில்லை. காந்தி பொறுமை காத்து தன் பணியைச் செய்து முடித்துவிட்டுப் போனார். அதுபோல, நாம் அனைவருமே மாற்றத்தின் விதைகள். அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்.
பெண்களுக்கு தமிழக அரசு மாத ஊதியம் வழங்குவதாக அறிவித்தது. இப்ப வரைக்கும் பண்ணலயே? தாய் நாடு, தாய் மண் என்று சொல்கிறீர்களே! செய்து விடலாம் என்ற வாக்குறுதி கொடுத்தால் மட்டும் போதாது. செயல்முறைப்படுத்த வேண்டும். அதற்கான அழுத்தத்தை அரசுக்கு கொடுத்துச் செய்ய வைக்க வேண்டும். உண்மையான ஜனநாயகம் என்பது அதுதான்.
நமக்குத் தெரியாம நம்மள சுத்தி நிறைய அவலங்கள் நடக்குது. எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு பிறந்த 35,000 குழந்தைகளையும் எய்ட்ஸ் நோய் தாக்கியது. அவர்கள் பிழைக்க வாய்ப்பில்லை-னு சொன்னாங்க. அவர்களிலிருந்து 2,000 குழந்தைகளை தேர்வு செய்து அவர்களின் தந்தையாக செயல்பட்டேன். அதற்காக, `பெற்றால்தான் பிள்ளையா’ என்ற அமைப்பை உருவாக்கினோம். அதனால் இரு பெண்களுக்கு மட்டும் நான் தந்தையல்ல.
அந்த நோய்க்கு மருந்து கண்டுபிடித்தனர். சிறிய விழுக்காடு மரணத்தை தவிர பலர் அதிலிருந்து பிழைத்து பல்வேறு பணிகளில் இருக்கின்றனர்.
அரசியல் வேண்டாம்’னு அமைதியா இருக்காதீங்க.அதுக்காக, மக்கள் நீதி மய்யத்துல வந்து சேருங்க-னு சொல்ல மாட்டேன். ஓட்டையாவது போடுங்க. முக்கியமா ஓட்டுக்குப் பணம் வாங்காதீங்க. அவங்க கொடுப்பாங்க,மொத்த பணத்தையும் நம்ம கிட்டருந்து வாங்கிட்டு கொஞ்சமா தட்டி விடறாங்க. நான் ஒருபோதும் பணம் கொடுக்க மாட்டேன்.
ஊழல் நோய் பரவக் கூடிய அபாயம் இருக்கு. அதனால், அரசியலில் துப்புரவு வேலையில் இறங்கியிருக்கிறோம்… அதை நீக்கப் போராடிக் கொண்டிருக்கிறோம். எனக்கு பெரியாரைப் பிடிக்கும். அதனால தான் இப்படி பேசறேன்.
இன்னும் இடது, வலது என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்கா, ஃபிரான்ஸ் போன்ற நாடுகள் மையக் கருத்துக்கு வர தொடங்கியிருக்கின்றன. அந்த வகையில், நான் ஆசியாவின் முதல் மையக் கருத்தாளன்” என்றார்.