பெங்களூரு: கர்நாடகாவில் எடியூரப்பா பதவிக் காலத்தில் அரசு நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனத்துக்கு முறைகேடாக ஒதுக்கப்பட்ட வழக்கில், தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தியும் சிக்கியுள்ளார். லோக் ஆயுக்தா நீதிமன்ற உத்தரவின்படி போலீசார் அவர் மீது வழக்குபதிவு செய்துள்ளனர். கர்நாடகா முன்னாள் முதல்வரும், பாஜ எம்பி.யுமான எடியூரப்பா, கடந்த 2017ம் ஆண்டு இம்மாநிலத்தில் முதல்வராக இருந்தார். அப்போது, அவரும் அவருடைய குடும்பத்தினரும் அரசு ஒப்பந்தங்களை வழங்குவதிலும், பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் சார்பில் நிலங்களை வழங்கியதிலும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.
பெங்களூரு நகர மேம்பாட்டு ஆணையத்துக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை, தனியார் கட்டுமான நிறுவனமான ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சனுக்கு குடியிருப்புகள் கட்ட எடியூரப்பா ஒதுக்கியதாகவும், இதற்காக ரூ.12.5 கோடி லஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து விசாரணை நடத்தும்படி, பெங்களூவை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆப்ரகாம், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் (லோக் ஆயுக்தா) புகார் அளித்தார். இந்நிலையில், ‘எடியூரப்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான ஊழல் வழக்கு குறித்து, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும். வரும் நவம்பர் 2ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும்’ என்று, போலீசாருக்கு, லோக் ஆயுக்தா சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து எடியூரப்பா, அவரது இளைய மகன் விஜயேந்திரா, பேரன் சசிதர் மரடி, மருமகன்கள் சஞ்சய் ஸ்ரீ, விருபாக் ஷப்பா யமகனமரடி, கூட்டுறவு துறை அமைச்சர் சோமசேகர், ஒப்பந்ததாரரும், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தியுமான சந்திரகாந்த் ராமலிங்கம், ஐஏஎஸ் அதிகாரிகள் பிரகாஷ், ரவி உள்ளிட்ட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில், ‘கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் 11ம் தேதி ரூ.567 கோடி மதிப்பில் கோணதாசபுரா திட்டத்திற்கான டெண்டர் வெளியானது. பெங்களூரு நகர வளர்ச்சி ஆணையம், ஒப்பந்ததாரர் சந்திரகாந்த் ராமலிங்கத்தின் நிறுவனமான ராமலிங்கம் கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திடம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டும் பணியை ஒப்படைத்தது.
கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 10ம் தேதி பெங்களூரு நகர வளர்ச்சி ஆணைய தலைவராக இருந்த தற்போதைய அமைச்சர் சோமசேகர், அதே ஆண்டு ஏப்ரல் 22ம் தேதி மேற்கண்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் கடிதத்தை பெறுவதற்காக தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஆதாயம் அடைந்துள்ளார். கட்டுமான பணியை தொடங்க ஜூலை 5ம் தேதி ரூ.12.5 கோடி லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது. அந்தத் தொகை, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிலருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது,’ என்று கூறப்பட்டுள்ளது. இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.