போளூர்: திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த அல்லியாளமங்கலத்தை சேர்ந்தவர்கள் ராமன் மகன் நவீன்(14), ராஜேந்திரன் மகன் செல்வா(14). இருவரும் அங்குள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தனர். அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அஜித்(16). பிளஸ் 1 படித்து வருகிறார். நேற்று மதியம் 1 மணியளவில், ஊராட்சி செயலாளரான ஆனந்தனிடம் டீ குடித்து விட்டு வருகிறோம் என கூறி, பைக்கை வாங்கி 3 பேரும் சென்றனர். நவீன் பைக்கை ஓட்டி சென்றான்.
மட்டபிறையூர் அருகே திடீரென பைக் நிலை தடுமாறி சாலையோர மின்கம்பத்தில் மோதியது. இதில் நவீன், செல்வா ஆகிய இருவரும் பலியாகினர். அஜித் படுகாயம் அடைந்தார். சிறுவர்களுக்கு பைக் கொடுத்த ஊராட்சி செயலாளர் ஆனந்தன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.