கோவையில் வாகன விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானத்தால் 4 பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த ஓட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க நபர், கோவையில் தங்கி தீத்திபாளையத்தில் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 13-ம் தேதி கோவை கொண்டாட்டம் அருகில் அவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. தலையில் பலத்த காயம் அடைந்த நிலையில், கோவை அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரின் உடல் உறுப்புகளை உறவினர்கள் தானம் அளிக்க முன்வந்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறும்போது, “மூளைச்சாவு அடைந்தவரின் 2 சிறுநீரகங்களில் ஒன்று, கோவையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளி ஒருவருக்கும், மற்றொன்று சேலம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த நோயாளி ஒருவருக்கும் தானமாக அளிக்கப்பட்டது.
கல்லீரலும், இதயமும் கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளுக்கு தானமாக அளிக்கப்பட்டது. தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்பேரில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்றார்.