திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களின் கைரேகைகள் பதிவு விரைவில் தொடக்கம்: போலிகளை தடுக்க அடையாள அட்டை வழங்க திட்டம்

திருவண்ணாமலை9: திருவண்ணாமலையில் சாமியார்களின் கைரேகைகள் பதிவு செய்யும் பணி விரைவில் தொடங்குகிறது. மேலும், கற்பக விநாயகர் கோயில் முன்பு மது அருந்திய போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலையில் நூற்றுக்கணக்கான சாமியார்கள் தங்கியுள்ளனர். குறிப்பாக, கோயில், கிரிவலப்பாதை மற்றும் ஆசிரமங்கள் பகுதியில் நிரந்தரமாக தங்கியுள்ள சாமியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

அதில், ஒரு சிலர் குற்றப்பின்னணி உள்ளதால், வெளியூர்களில் இருந்து இங்கு வந்து சாமியார் போல தங்கியிருப்பதாகவும், சிலர் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்துள்ளது. எனவே, சாமியார்களின் விவரங்களை முறையாக பதிவு செய்து, அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது. உண்மையான சாமியார்களுக்கு தேவையான தங்கும் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்ற வசதியாக இருக்கும் என கருதப்படுகிறது.அதே நேரத்தில் போலி சாமியார்களை அடையாளம் காண முடியும்.

இந்நிலையில், திருவண்ணாமலையில் தங்கியுள்ள சாமியார்களின் கைரேகை, முகவரி, புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை சேகரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அதற்கான பணிகள் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கற்பக விநாயகர் கோயில் முன்பு, நள்ளிரவு நேரத்தில் போலி சாமியார் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர், நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த தனபால்(54) என்பதும், கடந்த 22 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. பின்னர், அவரை போலீசார் சொந்த ஜாமீனில் விடுவித்து, சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.