சென்னை: நமது நாட்டின் இசை, தெய்வத்தன்மை கொண்டு விளங்குகிறது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்திய இசை, கலை அகாடமி சார்பில், பிரபல கர்னாடக இசைக் கலைஞர் ‘பத்மபூஷண்’ டி.வி.கோபாலகிருஷ்ணனின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு, ‘ஸ்வர்ண நவாதி’ என்ற நிகழ்ச்சி சென்னையில் 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.
கடந்த 16-ம் தேதி நடந்த முதல்நாள் நிகழ்ச்சியில், டி.வி.கோபாலகிருஷ்ணனின் 42 பாடல்கள் அடங்கிய இசை குறுந்தகடு, அவரது புத்தகம் வெளியிடப்பட்டது. சிறந்த இசைக் கலைஞர்கள் 9 பேருக்கு ‘ஆச்சார்ய நவரத்னா’ விருது, 99 பேருக்கு ‘ஆச்சார்ய ரத்னா’ விருது என 108 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
கடந்த 17-ம் தேதி நடைபெற்ற 2-ம் நாள் நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், சென்னை மியூசிக் அகாடமி தலைவர் ‘இந்து’ என்.முரளி, தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, நகரசபைகள் கூட்டமைப்பின் தலைவர் கே.ஹரிசங்கர், இசைக் கலைஞர் பிரின்ஸ் ராமவர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:
இசை என்பது பொழுதுபோக்கின் ஒரு பகுதி அல்ல. அதற்கு பல நூற்றாண்டு கால வரலாறு உள்ளது. குறிப்பாக, நமது நாட்டின் இசை, தெய்வத்தன்மை கொண்டதாக விளங்குகிறது. இயற்கையுடன் இணைந்திருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்கின்றனர். அந்த வகையில், டி.வி.கோபாலகிருஷ்ணன் நீடூழி வாழ்வார். நாம் 75-வது சுதந்திர தினம் கொண்டாடியுள்ளோம். 100-வது சுதந்திர தினம் கொண்டாடும்போதும் அவர் நம்முடன் இருப்பார். இவ்வாறு ஆளுநர் கூறினார்.
இதையடுத்து, சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து, அவருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர், டி.வி.கோபாலகிருஷ்ணன் ஏற்புரை நிகழ்த்தி பேசினார். ‘‘அனைவரது வாழ்விலும் இசை உண்டு. உங்களால் பேச முடியும் என்றால், பாடவும் முடியும். நமது இசை மகத்தானது. இதைபரப்பவே உலகம் முழுவதும் பயணித்தேன். இசை மீதான ஆர்வம் எப்போதும் குறையாமல் இருக்க வேண்டும் என்றுஇளையராஜா, ரஹ்மான், சிவமணி உள்ளிட்ட எனது அனைத்து மாணவர்களையும் வாழ்த்துகிறேன்’’ என்றார்.
தொடர்ந்து நடந்த அவரது இசைக் கச்சேரியை ஆளுநர் உள்ளிட்ட விருந்தினர்கள் கண்டு ரசித்தனர்.