புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு, செயல்படாமல் பெயரளவில் உள்ள 1,256 சங்கங்கள் கண்டறியப்பட்டுள்ளளன. இந்த சங்கங்களை கலைக்க, சங்கங்களின் பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரியில் கல்வி, கலை, இலக்கியம், பொது நலன் மேம்பாடு என பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி, சங்கங்கள் அமைக்கப்படுகின்றன. இந்த சங்கங்கள், பதிவு சட்டத்தின்படி, அந்தந்த மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் முறைப்படி விண்ணப்பித்து, பதிவு செய்ய வேண்டும்.
25 ஆயிரம் சங்கங்கள்
கூட்டுறவு சங்கம், குடியிருப்போர் நலச் சங்கம், அடுக்குமாடி வீட்டு உரிமையாளர் சங்கம், நகர் நல சங்கம் என, எந்த சங்கமாக இருந்தாலும், சங்கங்கள் பதிவு சட்டத்தில், பதிவு செய்யப்பட வேண்டும். இவை, சங்கங்களின் சட்ட விதிகளின் படியே, செயல்பட வேண்டும். இதன்படி, மாநிலம் முழுதும் 25 ஆயிரம் சங்கங்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன.இவற்றில் பெரும்பாலான சங்கங்கள், முறையாக செயல்படாமல் பெயரளவுக்கு உள்ளதாக, இந்திய கம்பெனி விவகாரத் துறைக்கு புகார்கள் சென்றன. இது தொடர்பாக, புதுச்சேரியில் உள்ள மாவட்ட சங்கங்களின் பதிவாளர் தீவிர விசாரணை நடத்தினார்.
1,256 சங்கங்கள் கலைப்பு
அதில், கடந்த 1991ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை பல சங்கங்கள் செயல்படாமல் இருப்பது உறுதியானது.இதனை தொடர்ந்து, மாநிலத்தில் செயல்படாத 1,256 சங்கங்கள் அடையாளம் காணப்பட்டு, அதிரடியாக கலைக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை சங்கங்களின் பதிவாளர் கோகுல்நாத் பிறப்பித்தார்.இந்த கலைப்பு பட்டியல், அரசாணையாக பொதுமக்களின் பார்வைக்கு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.கலைக்கப்பட்டுள்ள சங்கங்களின் பட்டியலில் நற்பணி மன்றங்கள், இளைஞர் மன்றங்கள், பெற்றோர் சங்கங்கள், குடியிருப்பு சங்கம், மகளிர் மன்றம், விளையாட்டு மன்றங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன.
காரணம் என்ன?
சங்கங்களை பதிவு செய்தால் மட்டும் போதாது. சங்க விதிமுறைகளின்படி ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம் நடத்தி, வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இந்த விபரங்களை, சம்பந்தப்பட்ட சங்கங்களின் பதிவாளருக்கு அனுப்ப வேண்டும். ஆனால், இந்த சங்கங்கள் அனைத்தும் பல ஆண்டுகளாக வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் டிமிக்கி கொடுத்து வந்தன.
சங்கங்கள் செயல்படு கிறதா என்று அறிய, மாவட்ட பதிவாளர் மூலம் பல முறை, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டது. அதற்கும் முறையான பதில் வரவில்லை.சங்க முகவரிக்கு அனுப்பப்பட்ட கடிதங்களும் சுவற்றில் அடித்த பந்துபோல திரும்பி வந்தன. இந்த சங்கங்கள், பதில் அளிக்க வேண்டும் என, கடைசி வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பிறகும் உரிய பதில் வராததால், வேறு வழியின்றி கலைக்கப்பட்டு உள்ளன.இந்த சங்கங்களின் பெயர்கள், பதிவுத்துறை கோப்புகளில் இருந்து விரை வில் நீக்கப்பட உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்