உபி.யின் தாருல் உலூம் அறிவிப்பு மதரசாக்களை ஆய்வு செய்ய ஆட்சேபனை எதுவும் இல்லை

சஹாரன்பூர்: ‘உத்தரப்பிரதேச அரசு தனியார் மதரசாக்களை ஆய்வு செய்வதில் எந்த ஆட்சேபனையும் இல்லை’ என புகழ்பெற்ற தாருல் உலூம் தியோபந்த் மதரசா பள்ளி கூறி உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் செயல்படும் அங்கீகரிக்கப்படாத தனியார் மதரசாக்களில் தீவிரவாதம் தொடர்புடைய சம்பவங்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், இதுபோன்ற மதராக்களில் ஆய்வு நடத்தி கட்டுப்படுத்த, இம்மாநில அரசு கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி உத்தரவிட்டது.

இதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டது. அக்குழுவினர் அக்டோபர் 15ம் தேதிக்குள் கணக்கெடுப்பு நடத்தி, அறிக்கை தர உபி அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த முடிவுக்கு சில மதரசா நிர்வாகத்தினர் அச்சம் தெரிவித்தனர். உபியில் உள்ள உலகப் புகழ்பெற்ற நத்வதுல் உலமா மற்றும் தாருல்  உலூம் உள்ளிட்ட 16,000க்கும் மேற்பட்ட மதரசா பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் பல்வேறு மதரசாக்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு சஹாரன்பூரில் நேற்று நடந்தது.

மாநாட்டிற்கு பின் பேட்டி அளித்த ஜமியத் உலமா இ ஹிந்த் தலைவர் மவுலானா அர்ஷத் மதனி, ‘‘மதரசாக்களின் கதவுகள் எப்போதும் அனைவருக்கும் திறந்திருக்கும். அவை நாட்டின் அரசியலமைப்பின் கீழ் செயல்படுகின்றன. அனைத்து மதரசாக்களும் கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். அதே சமயம், ஒன்றிரண்டு நிறுவனங்கள் விதிமுறைகளை கடைபிடிக்கத் தவறியது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்காக முழு அமைப்பையும் இழிவுபடுத்தக் கூடாது’’ என்றார்.

ஆர்எஸ்எஸ் பள்ளிகளால் நாட்டின் தோற்றம் மாறும்
‘மதரசாக்களைப் போல ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தும் சரஸ்வதி சிஷு மந்திர் பள்ளிகளிலும் ஆய்வு நடத்தப்படுமா?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, உபி போக்குவரத்து அமைச்சர் தயாசங்கர் சிங் கூறுகையில், ‘‘சரஸ்வதி சிஷு மந்திர் பள்ளியில் சிறந்த கல்வி வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் இதுபோன்ற பள்ளிகள் கொண்டு வந்தால், அது தேசத்தின் தோற்றத்தையே மாற்றிவிடும்,’’ என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.