நாமகிரிப்பேட்டை: தமிழகத்தில் மிக விரைவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ராமதாஸ் அத்வாலே கூறினார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான மாநாடு, கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. நிறைவு நாளான நேற்று, ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர் ராமதாஸ் அத்வாலே பங்கேற்று மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அப்போது, அவர் பேசியதாவது:
தமிழகத்தில் மிக விரைவில் யோகா மற்றும் இயற்கை மருத்துவமனை அமைக்கப்படும். பாரம்பரிய அறிவியல் ஆரோக்கிய அணுகுமுறைகளான யோகா மற்றும் இயற்கை மருத்துவத்திற்கான தேவைகள், தற்போது உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை பகுதி இயற்கை மருத்துவ தேவைகளுக்கு சிறந்த அங்காடி கூடம். அப்பகுதியைச் சேர்ந்த மக்கள், இயற்கை மருத்துவத்தையே மேற்கொண்டு வருகின்றனர்.
யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தின் பலன்களை உலகிற்கு எடுத்துச்செல்ல வேண்டிய நேரம் வந்துள்ளது. சாத்தியக்கூறு அறிக்கைகளை ஆய்வு செய்து, நாமக்கல் மற்றும் அண்டை பகுதிகளை மருத்துவ சுற்றுலா மண்டலமாக மேம்படுத்த, சுற்றுலா அமைச்சகத்திற்கு முன்மொழிவோம். சமூகத்தின் இளைஞர்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், இந்த பிராந்தியத்தில் யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை ஆய்வு செய்ய எங்கள் அமைச்சகம் ஆர்வமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் தமிழகத்தில் பல்வேறு கல்லூரியில் இருந்து ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.