புதுடெல்லி: ஆந்திரா, தெலங்கானாவைச் சேர்ந்த பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பு நிர்வாகிகள் வீடு, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். இதையொட்டி, 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், முக்கிய ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடந்த ஜூலை மாதம் பிஹாரில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்ற போது, அவரைக் கொல்லத் திட்டமிட்டதாக 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், 26 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல அதிர்ச்சித் தகவல்கள் வெளிவந்தன. ஆந்திரா, தெலங்கானா, கேரளா, தமிழகம், உத்தரப் பிரதேசம், மேற்குவங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் கடந்த ஜூலையில் பாட்னாவில் ஒன்றுகூடி, பிரதமரைக் கொல்லத் திட்டமிட்டதும், உளவு அமைப்புகளின் எச்சரிக்கையால் சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
தெலங்கானாவில் ஆயுதப் பயிற்சி
இதற்கிடையே, கடந்த ஜூலையில் தெலங்கானாவின் நிஜாமாபாத் போலீஸார், அப்துல் காதர், ஷேக் ஷகானுல்லா, முகமது இம்ரான், முகமது அப்துல் மொபின் ஆகியோரைக் கைது செய்தனர். கராத்தே மாஸ்டரான அப்துல் காதர், தற்காப்புக் கலைப் பயிற்சி என்ற பெயரில் 300-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், அப்துல் காதருக்கும், பிஎஃப்ஐ அமைப்புக்கும் நெருங்கியத் தொடர்பு இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. பிஹாரில் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்ட வழக்கை என்ஐஏ விசாரித்து வருகிறது.
தெலங்கானா நிஜாமாபாத் வழக்கு, பிஹார் வழக்கை ஒத்திருப்பதால், என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் அண்மையில் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 26-ம் தேதி என்ஐஏ அதிகாரிகள், நிஜாமாபாத் வழக்கு தொடர்பாக தனி வழக்கு பதிவு செய்தனர். இதில், பிஎஃப்ஐ அமைப்பைச் சேர்ந்த 26 பேர் எதிரிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஆந்திரா, தெலங்கானாவை சேர்ந்த பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்கள் உட்பட 40 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
ஆந்திராவில் கர்னூல், குண்டூர், கடப்பா, நெல்லூர் மாவட்டங்களில் சோதனை நடத்தப்பட்டது. தெலங்கானாவில் ஹைதராபாத், நிஜாமாபாத் மாவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சோதனை நடை
பெற்றது. ஆந்திராவின் நந்தியால் பகுதியில் பிஎஃப்ஐ நிர்வாகி யூனூஸ் அகமது வீட்டில் சோதனை நடத்திய
போது, அப்பகுதி மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் போலீஸார் உதவியுடன் அவர்கள் அப்புறப்படுத்தப்பட்டனர்.
இதேபோல, ஆந்திராவின் நெல்லூர் பகுதியில் இலியாஸ் என்பவரது வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தச் சென்ற போது, அப்பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸார் விரட்டியடித்தனர். இலியாஸின் வீட்டில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
நிஜாமாபாத்தில் பிஎஃப்ஐ நிர்வாகி ஷாகித் வீட்டில் நடத்திய சோதனையில், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவருக்கும், ஏற்கெனவே கைதான அப்துல் காதருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பல்வேறு ஆயுதப் பயிற்சி முகாம்களை ஷாகித் ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ரூ.8.31 லட்சம் பறிமுதல்
ஆந்திரா, தெலங்கானாவில் நடத்தப்பட்ட சோதனைகளின் போது 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் யார் என்ற விவரங்களை, என்ஐஏ அதிகாரிகள் வெளியிடவில்லை. ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்படுகிறது.
என்ஐஏ சோதனையின்போது பிஎஃப்ஐ நிர்வாகிகளின் செல்போன், கணினி, முக்கிய ஆவணங்கள், இரும்பிலான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.8.31 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டது.
சோதனை குறித்து என்ஐஏ அதிகாரிகள் கூறும்போது, “தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இளைஞர்களுக்கு பிஎஃப்ஐ பயிற்சியளித்து வருகிறது. மதத்தின் பெயரால் வெறுப்பைத் தூண்டி, கலவரத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக பிஎஃப்ஐ சார்பில் பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு, கராத்தே வகுப்பு என்ற பெயரில் ஆயுதப் பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கலவரத்தைத் தூண்டுதல், சமூக வலைதளங்களில் எந்தவகையில் கருத்துகளை வெளியிடுதல் என்பன குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது.
பிஹாரில் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய பிஎஃப்ஐ நிர்வாகிகள் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இதே விவகாரம் தொடர்பாக, தற்போது தென்மாநிலங்களில் விசாரணையைத் தொடங்கி உள்ளோம். ஆந்திரா, தெலங்கானாவில் தேசவிரோதச் செயல்களில் ஈடுபடும் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடு, அலுவலகங்களில் 24 குழுக்கள் சோதனை நடத்தியதில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பலர் சிக்குவார்கள்” என்றனர்.