`பிறருக்கு உதவுவதைவிடச் சிறந்தது வேறு ஒன்றுமில்லை என்பதுதான் நாம் முதலில் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.’ – மார்ட்டின் லூதர் கிங்
ஸ்டீவ் வாக் (Steve Waugh)… சொன்னாலே கிரிக்கெட் ரசிகர்களின் நாடி நரம்புகளில் உற்சாகம் பாய்ச்சும் பெயர். ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர். மலைக்கவைக்கும் ரெகார்ட் படைத்தவர். ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இவர் போட்டியிட்ட டெஸ்ட் மேட்சுகள் 57; அவற்றில் 41 மேட்சுகளில் வெற்றி. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் 106; அவற்றில் வெற்றிபெற்றவை 67. அவர் எடுத்த ஸ்கோரும் அட்டகாச ரகம். டெஸ்ட் மேட்சுகளில் அவர் குவித்த மொத்த ரன்கள் 10,927. ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் எடுத்த ரன்கள் 7,569. எந்தத் துறையாகவும் இருக்கட்டும்… சாதனை படைத்தவர்கள் பழைய வாழ்க்கையை மறந்துபோகிறார்கள் அல்லது கொடுத்த வாக்குறுதியை மறந்துபோகிறார்கள். நினைவில் வைத்திருந்து நிறைவேற்றுபவர்கள் ஒருசிலரே. அவர்களில் ஒருவர் ஸ்டீவ் வாக்.
குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர். தம்பி மார்க்குக்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகப் பிறந்தவர் ஸ்டீவ். மார்க்கும் கிரிக்கெட் விளையாட்டு வீரர்தான். இவர்களுக்கு இரண்டு தம்பிகள். பரம்பரை பரம்பரையாக விளையாட்டே கதி என்றிருந்த குடும்பம். அப்பாவும் அம்மாவும் டென்னிஸ் விளையாட்டில் மும்முரமாக இருந்தார்கள். அதனாலேயோ என்னவோ, ஸ்டீவுக்கு விளையாட்டு ரத்தத்திலேயே ஊறியிருந்தது. அப்பா ரோட்ஜர் ஒரு பேங்க்கில் ஆபீஸர். அம்மா பீவர்லி வாக் பள்ளி ஆசிரியை. ஏதோ மனஸ்தாபம்… அம்மாவும் அப்பாவும் விவாகரத்து வாங்கிக்கொண்டு பிரிந்து வாழ்ந்தார்கள். ஸ்டீவும் மற்ற குழந்தைகளும் அம்மாவின் அரவணைப்பில்தான் வளர்ந்தார்கள்.
வீட்டில் மார்க்குக்கும் ஸ்டீவுக்கும் சதா போட்டியும் சண்டையுமாக இருக்கும்.
ஒருநாள் கோபத்தோடு வந்தார் ஸ்டீவ். “என் சட்டையை எதுக்குடா நீ போட்டே?’’
“நீ இன்னிக்கி லேட்டா எந்திரிச்சே… அதான்…’’
“அதுக்காக உன்னோட கிழிஞ்ச சட்டையை நான் போட்டுக்கிட்டுப் போக முடியுமா… கழட்டுடா.’’
“விடு ஸ்டீவ். பீரோவுல ரெண்டாவது ரேக்குல உன்னோட ரெட் கலர் ஷர்ட்டை துவைச்சு வெச்சிருக்கேன் பாரு. அதை எடுத்து போட்டுக்கோ’’ என்றார் அம்மா.
இன்னொரு நாள். “அம்மா அவனுக்கு மட்டும் பேட் வாங்கிக் குடுத்திருக்கீங்க… எனக்கு ஹேண்ட் கிளவுஸ் வாங்கிக் குடுங்கம்மா’’ என்றார் ஸ்டீவ்.
“ஆமாம்… நீ கிளவுஸ் போட்டுட்டு ஆடினாத்தான் நிறைய ரன் எடுப்பே… போவியா’’ என்று மார்க் கிண்டலடித்தார். உடனே ஸ்டீவ், மார்க்கோடு சண்டையிடப் பாய்ந்தார். அம்மா வந்து இருவரையும் சமாதானப்படுத்தினார். “என் ஒருத்தி சம்பாத்தியத்துல என்னவெல்லாம்டா வாங்க முடியும்’’ என்று வேதனைப்பட்டார். குழந்தைகள் அதற்கு மேல் பேசாமல் கிரவுண்டுக்குக் கிளம்பிவிட்டார்கள்.
ஸ்டீவ் வாக்குக்கு அம்மாவின் நிலைமை புரிந்திருந்தது. அதற்காக கிரிக்கெட்டை அவரால் விட முடியவில்லை. கிடைக்கிற சின்னச் சின்ன வேலைகளையெல்லாம் பார்த்தார். அதனால் கிடைத்த காசை கிரிக்கெட்டுக்கே செலவழித்தார். ஸ்கூலில் ஒரு விளையாட்டுப் போட்டி… அம்பயர் ஸ்டீவ். அந்தப் பணிக்காக ஒரு சிறு தொகையைக் கொடுத்தார்கள். அந்தத் தொகையைக்கொண்டு கிரிக்கெட் கோச்சிங் கிளாஸில் சேர்ந்தார் ஸ்டீவ்.
மற்றொரு தினம். அம்மாவும் குழந்தைகளும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். “ஏம்மா… நானும் மார்க்கும் கிரிக்கெட் விளையாடுறோம். அதனால பேட்டையும் பாலையும் மாத்தி மாத்தி யூஸ் பண்ணிக்கிறோம். ஒருவேளை நான் டென்னிஸுக்குப் போயிருந்தா, தனியா டென்னிஸ் பேட், பால் வாங்கணும்ல..?’’ என்று கேட்டார் ஸ்டீவ்.
அம்மா பதில் எதுவும் சொல்லாமல் சோகமாக ஸ்டீவைப் பார்த்துப் புன்னகைத்தார்.
“கவலைப்படாதீங்கம்மா. நான் பெரிய ஆளாகி கிரிக்கெட்ல நிறைய ரன் எடுத்து, பெட்டி பெட்டியா பணம் சம்பாதிச்சு உங்களுக்குக் குடுக்குறேம்மா.’’
அம்மா நெகிழ்ந்துபோய், “என் தங்கம்…’’ என்று ஸ்டீவைக் கட்டிக்கொண்டார். “அதெல்லாம் வேணாம் ஸ்டீவ். நான் ஒண்ணு சொன்னா அதை நிறைவேத்துவியா?’’
“சொல்லுங்கம்மா.’’
“நாம எப்படியோ பொழச்சுப்போம். ஆனா ஆதரவில்லாத எத்தனையோ குழந்தைங்க இந்த உலகத்துல இருக்காங்க. ஒருவேளை நீ நிறைய சம்பாதிச்சேன்னா, அந்த மாதிரி குழந்தைகளுக்கு உதவி பண்ணணும். செய்வியா?’’
“நிச்சயம் செய்வேம்மா.’’
`பிறருக்கு உதவ வேண்டும்’ என்று அம்மா அவர் மனதில் விதைத்தது அவருடைய சுபாவமாகவே மாறிப்போனது.
அதிரடி ஆட்டத்துக்குப் பேர்போனவர் ஸ்டீவ். இடத்துக்கு ஏற்ப, தான் ஆடும் முறையையும் மாற்றிக்கொள்வார். 1984-ல் கிரிக்கெட் விளையாட்டில் காலெடுத்து வைத்தவர். எத்தனையோ போட்டிகள், வெற்றி தோல்விகள். 1987-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டி அவருக்கு வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. `யார் இந்தப் பையன்?’ என்று கிரிக்கெட் ரசிகர்கள் வாக்கின் மேல் கண்பதிக்க ஆரம்பித்தார்கள். பல ஆண்டுகளுக்கு `நம்பர் ஒன் பேட்ஸ்மேன்’ என்ற பட்டத்தை அவருக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். பல உலக சாதனைகளையும் கிரிக்கெட்டில் பதித்தார் ஸ்டீவ். “1999-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலிய அணி கோப்பையைக் கைப்பற்ற ஸ்டீவ் வாக்கின் கேப்டன்ஷிப்தான் காரணம்’’ என்றார்கள் விளையாட்டு விமர்சகர்கள்.
விமர்சனங்களும் அவரைத் துரத்தாமலில்லை. “ஸ்டீவ் வாக் ஒரு சுயநலக்காரர்’’ என்று பிரபல விளையாட்டு வீரர் ஷேர்ன் வார்னே கமென்ட் அடித்தபோது, பதற்றப்படாமல் “அணியின் நன்மைக்காகத்தான் அவரை நீக்கினேன்’’ என பதிலளித்தார் ஸ்டீவ்.
அம்மாவுக்குக் கொடுத்த வாக்குறுதியை அவர் மறக்கவில்லை. கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு சமூக சேவையில் ஈடுபட ஆரம்பித்தார். கொல்கத்தாவில் இருக்கும் தொழுநோயாளிகளின் குழந்தைகள் வசிப்பதற்காக கட்டப்பட்ட காலனிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார். அரிய வகை நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவுவதற்காகவே `ஸ்டீவ் வாக் ஃபவுண்டேஷன்’ என்ற ஒன்றை ஆரம்பித்தார். அதன் மூலம் பலனடைந்த குழந்தைகள் ஏராளம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு விளையாட வந்தது. உலகமே அந்த கிரிக்கெட் உற்சவத்தைப் பார்த்துக்கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனான ஸ்டீவ் வாக்கும் வந்தார். விளையாட்டை வேடிக்கை பார்க்க அல்ல… தன் நண்பரின் கடைசி ஆசையை நிறைவேற்ற.
அவரின் நண்பர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்தார். ஷூவுக்கு பாலிஷ் போடுவதுதான் அவருடைய வேலை. அவர் ஸ்டீவ் வாக்கிடம் ஒரு கோரிக்கை வைத்திருந்தார். “நான் இறந்ததுக்கு அப்புறம் என் உடம்பை புதைக்கக் கூடாது. அதை எரிச்சு, அஸ்தியை இந்தியாவுல இருக்குற கங்கையில கரைக்கணும். அப்போதான் புண்ணியம் கிடைக்குமாம். எனக்காக செய்வியா ஸ்டீவ்?’’
அந்தக் கோரிக்கையை தலையசைத்து, மௌனமாக ஏற்றுக்கொண்டிருந்தார் ஸ்டீவ். அந்த நண்பர் இறந்த பிறகு, அவருடைய இறுதி ஆசையை நிறைவேற்ற இந்தியாவுக்கு வந்தார். வாரணாசியில், கங்கையில் அஸ்தியைக் கரைத்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய ஸ்டீவ் இப்படிச் சொன்னார்… “என் நண்பருக்கு உறவு என சொல்லிக்கொள்ள யாருமில்லை. வாழ்நாளெல்லாம் கஷ்டங்களை மட்டுமே சுமந்தவர். இன்றைய தினம்தான் அவருடைய வாழ்நாளிலேயே மகிழ்ச்சியான தினம் என நான் நினைக்கிறேன்…’’