Doctor Vikatan: ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்தும் ரத்தக்குழாய் அடைப்புக்கு காரணமென்ன?

Doctor Vikatan: இதயத்தில் அடைப்பு ஏன் ஏற்படுகிறது? அதைத் தவிர்கக் முடியுமா? அடைப்பு எப்போது தீவிரமாகும்? அது எத்தனை சதவிகிதம் போனால் ஆபத்து?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த, இதயநோய் மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்…

மருத்துவர் அருண் கல்யாணசுந்தரம்

இதயத்தின் ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பானது துரதிர்ஷ்டவமாக மிகவும் பரவலாகக் காணப்படுகிற ஒரு விஷயமாக இருக்கிறது. இதயத்தில் மூன்று ரத்தக்குழாய்கள் இருக்கும். வயதாக, ஆக இந்த ரத்தக் குழாய்களில் அடைப்பு அதிகரிக்கும்.

இதய ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். சிலருக்கு பரம்பரையாக இந்த பாதிப்பு தொடரலாம். வயதாக, ஆக அதன் தீவிரம் அதிகரிக்கும். ஒருவரின் மரபணுக்களைப் பொறுத்து சிலருக்கு இந்த பாதிப்பு தீவிரமாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய பாதிப்புகள் உள்ளவர்கள், ரிஸ்க் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இத்துடன் புகைப்பழக்கமும் ஆல்கஹால் பழக்கமும் இருந்தால் இந்த ரிஸ்க் மேலும் அதிகரிக்கும்.

இந்த அடைப்பானது 40-50 சதவிகிதமாக இருக்கும்வரை பலருக்கும் அதன் அறிகுறியே தெரியாது. அதுவே 70 சதவிகிதத்துக்கும் மேல் அதிகரிக்கும்போது அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். அதாவது நடக்கும்போது மூச்சு வாங்குதல், நெஞ்சை அழுத்துவது போன்ற உணர்வும், வலியும், களைப்பும் இருக்கலாம். இவற்றை ‘எக்ஸெர்ஷன் சிம்ப்டம்ஸ்’ ( exertion symptoms) என்று சொல்வோம். நடக்கும்போது உணரப்படும் இந்த அறிகுறிகள், நிற்கும்போது சரியாகிவிடும்.

பலரும் இந்த அறிகுறிகளை வயதாவதன் அறிகுறிகளாக நினைத்து அலட்சியப்படுத்துவார்கள். ஆனால் அதன் பின்னணியில் இதயத்தின் ரத்தக் குழாய் அடைப்பு காரணமாக இருக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியாது.

இதை `க்ரானிக் கொரோனரி சிண்ட்ரோம்’ (Chronic coronary syndrome) அல்லது `ஸ்டேபிள் ஆன்ஜினா’ (Stable angina) என்று சொல்வோம்.

சிலருக்கு சில நேரம் 30-40 சதவிகிதமாக இருக்கும் ரத்தக்குழாய் அடைப்பு, திடீரென வெடித்து தீவிரமாகலாம். அது 100 சதவிகித அடைப்பாக மாறலாம். அதைத்தான் `மாரடைப்பு’ அல்லது ‘ஹார்ட் அட்டாக்’ என்கிறோம். இதை `மையோகார்டியல் இன்ஃபார்க்ஷன்'(myocardial infarction) என்கிறோம். இந்த நிலை ஏற்படும்போதுதான் கடுமையான நெஞ்சுவலி, மூச்சு வாங்குவது அதிகரிப்பது போன்றவற்றை உணர்வார்கள்.

ஹார்ட் அட்டாக்

உலக அளவிலும் சரி, இந்திய அளவிலும் சரி, மக்களின் மரணத்துக்கு முதல் காரணம் இந்த பாதிப்புதான். எனவே இந்த அறிகுறிகள் வந்தால் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். வயதாவதன் அறிகுறி, வேலை பார்த்ததன் அறிகுறி என்றெல்லாம் சமாதானம் சொல்லிக் கொண்டு மருத்துவ ஆலோசனையைத் தள்ளிப்போடுவது சரியானதல்ல.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.