கேரளா அரசு பம்பர் லாட்டரி டிக்கெட் வாங்கிய அடுத்த நாளே குபேரன் ஆன ஆட்டோ டிரைவர்: ரூ.25 கோடி பரிசு

திருவனந்தபுரம்: கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி முதல் பரிசு ரூ. 25 கோடி திருவனந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவருக்கு கிடைத்துள்ளது.
 கேரள அரசின் ஓணம் பம்பர் லாட்டரி இரு மாதங்களுக்கு முன் விற்பனைக்கு வந்தது. இதன் முதல் பரிசு ரூ.25 கோடியாகும்.  இந்தியாவில் இவ்வளவு பெரிய பரிசுத்தொகை வேறு எங்கும் கிடையாது. டிக்கெட்டின் விலை ரூ.500 ஆக இருந்த போதிலும் பரபரப்பாக  விற்றது. மொத்தம் 67.5 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. இதன்மூலம், கேரள அரசுக்கு ரூ.300 கோடி வருவாய் கிடைத்தது.

 இந்நிலையில், இந்த லாட்டரி குலுக்கல் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. இதில் முதல் பரிசு TJ 750605 என்ற டிக்கெட்டுக்கும், 2வது பரிசு ரூ. 5 கோடி TG 270912 என்ற டிக்கெட்டுக்கும் கிடைத்தது. இதில், முதல் பரிசான ரூ.25 கோடி, திருவனந்தபுரம் ஸ்ரீவராகம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான அனூப்புக்கு (30) கிடைத்துள்ளது.  இவர் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்குதான், திருவனந்தபுரம் பழவங்காடியில்  உள்ள தனது தங்கையின் கடையில் டிக்கெட்டை வாங்கியுள்ளார். மறுநாளே கோடீஸ்வரனாகி விட்டார்.

மகளின் உண்டியலை உடைத்து…
அனூப் கூறுகையில், ‘ஆட்டோ டிரைவரான நான், மலேசியாவுக்கு வேலைக்கு செல்ல திட்டமிட்டேன். அப்போதுதான், லாட்டரி வாங்கும் யோசனை வந்தது.   ஆனால், என்னிடம் ரூ.450 மட்டுமே இருந்தது. அதனால், டிக்கெட் வேண்டாம் என்று நினைத்தேன். பின்னர், முடிவை மாற்றிக் கெண்டு, மகளின் உண்டியலை உடைத்து ரூ.50 எடுத்து டிக்கெட் வாங்கினேன். நேற்று இரவு 8 மணிக்குதான் டிக்கெட் வாங்கினேன். எனக்கு ரூ.25 கோடி முதல் பரிசு கிடைத்ததை நம்பவே முடியவில்லை,’ என்றார். இவருக்கு ஏஜென்ட் கமிஷன், வரிகள் போக, ரூ.15.75 கோடி கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.