திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராமத்தில் மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் வேலு நாச்சியார், ஜான்சி ராணி, மருதுபாண்டி சகோதரர்கள், ராணி மங்கம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மன், உட்பட 40 சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்பட கண்காட்சி மற்றும் சுதந்திர போராட்டம் தொடர்பான ஒலியும் ஒளியும் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் மத்திய கல்வி, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்த மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், “கிராமப்புறம் வளர்ந்தால் தான் இந்தியா வளரும். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள் மீது பிரதமர் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தமிழ் மொழி உலகின் தொன்மையான மொழி. தாய் மொழியில் பயின்றால் தான் அறிவை வளர்க்க முடியும். தாய் மொழி கல்வி தான் அதிக பலன் தரும்.
கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் ஆண்ட போது பொறியியல் படிப்பு இல்லை. ஆர்க்கிடெக்சர் பயிலாமல் பல கட்டடங்கள் கோயில்களை உருவாக்கினர். இதற்கெல்லாம் காரணம் அவர்களிடம் இருந்த ஆளுமை, சிறந்த படைப்பு திறன் தான். தமிழ் அமுத மொழி, இனிய மொழி. பிரதமரின் தனிப்பட்ட ஆர்வம் காரணமாக தமிழ் மொழிக்காக பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் தமிழ் இருக்கை தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா காலத்தில் பொருளாதாரம், சைக்காலஜி, சமூகம் என அனைத்து பிரச்னைகளும் இருந்தன. தற்போது இந்தியா உலகில் சிறந்த பொருளாதார நாடாக திகழ்கிறது. 21 ஆம் நூற்றாண்டில் பொருளாதார வளர்ச்சியில் இந்தியா உச்சத்தில் இருக்கும். இந்தியாவில் மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு மொழிகள் பேசப்படுகிறது. பல மொழிகளில் வணக்கம் என்பதற்கு வேறு வேறு வார்த்தைகள் உள்ளது. ஆனால் இரண்டு கைகளை இணைத்து கும்பிட்டால் வணக்கம் என்பது அனைத்து மொழிகளிலும் புரியும். இது தான் இந்தியா” என்றார்.
மத்திய இணை அமைச்சர் முருகன், “சுதந்திரப் போராட்டத்தில் தென் தமிழகத்தை தவிர்த்து விட்டு சுதந்திரப் போராட்ட வரலாற்றை எழுத முடியாது. சுதந்திரப் போராட்டத்திற்கு வித்திட்டது நமது தமிழகம் தான். மகாகவி பாரதியாருடைய வழியில் நமது பாரத பிரதமர் செயல்பட்டு வருகிறார்.
பெண்களின் சக்தி நாட்டின் சக்தி. பெண்கள் முன்னேற்றம் நாட்டின் முன்னேற்றம் என செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். 2047 ஆம் ஆண்டு நூறாவது சுதந்திர தினத்தை கொண்டாடும்போது நம்முடைய நாடு வளர்ச்சியடைந்த நாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாரத பிரதமர் செயல்பட்டு வருகிறார்” என்றார்.