கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் கூட்டம் நடத்திய பாஜக கவுன்சிலர்மீது வழக்கு பதிவு…

சென்னை: மயிலை கபாலீஸ்வரர் கோயிலை பக்தர்களிடம் ஒப்படைக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெயரில் பக்தர்கள் கூட்டத்தை கூட்டி கூட்டம் நடத்தியதாக  பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் உள்பட பலர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. அதுதொடர்பான இன்று விசாரணைக்கு ஆஜராகும்படி மயிலைப்பூர் காவல்நிலையம் சம்மன் அனுப்பி உள்ளது.

சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாக செய்தி வெளியிட்டது. இதைத்தொடர்ந்து,  கடந்த 31-ம் தேதி மாலை விநாயகர் சதூர்த்தியன்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வெங்கடேஷ், இந்து தமிழர் கட்சியின் தலைவர் ரவி உட்பட 75க்கும் மேற்பட்டோர் கபாலீஸ்வரர் கோயிலுக்குள் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

பின்னர் கோயில் நான்காவது வாயிலின் கதவை மூடி திடீரென நவராத்திரி மண்டபத்தில் அனைவரும் ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். குறிப்பாக அறநிலையத்துறை நடவடிக்கைகளை கண்டித்தும், கபாலீஸ்வரர் கோயில் நிர்வாகத்தை பக்தர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்கும் கூட்டம் நடத்தினர்.  இதில் ஏராளமானோ இந்துக்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து கோவில் ஆணையர் காவேரி தரப்பில்,  அனுமதி இல்லாமல் கூட்டம் நடத்தியதாக மயிலாப்பூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரின் பேரில், பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன்,  இந்து தமிழர் கட்சித் தலைவர் ரவி உள்ளிட்ட 75 பேர் மீதும் 4 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது.அனுமதியின்றி பொது இடத்தில் கூட்டம் கூடுதல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்து உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  தொடர்ந்து சம்பவம் குறித்த  சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த கூட்டம் கூடியது தொடர்பாக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்துக்கு காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. உமா ஆனந்த் உள்பட 6 பேர் இன்று மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் தர காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.