கோவை மாவட்டம், சூலூரை அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் நடத்தும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு விளக்க முகாம் நடைபெற்றது. இதில் அழைப்பாளராக கலந்து கொண்ட சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வி.பி கந்தசாமி, மருத்துவ முகாமை பார்வையிட்டார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய எம்எல்ஏ; அதிமுக மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளின் சின்னங்கள் வேறானாலும் எண்ணங்கள் எல்லாம் ஒன்றுதான்.
எங்கள் எண்ணங்கள் எல்லாம் மக்களின் தொகுதியினுடைய வளர்ச்சிக்காக தான் இருக்கும். பல திட்டங்கள் இப்பகுதியில் நிறைவேற்றி இருக்கிறோம். நமது தமிழகத்தில் மட்டுமல்ல உலக அளவில் டெங்கு பரவி வருகிறது.
அதனை சரிசெய்ய சவாலாக மருத்துவத்துறை செயலாற்றி கொண்டிருக்கிறது. முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும், கலைஞர் கருணாநிதியும் செயல்பட்டது போல, இப்போதைய உள்ள முதலமைச்சரும், தமிழக அரசும் மருத்துவ துறைக்கு என தனியாக கவனம் செலுத்தி மக்களை காப்பதில் சிறப்பாகவும், சிந்தனையோடும் செயலாற்றிக்கொண்டு இருக்கிறது என தெரிவித்தார்.
அதிமுக எம்.எல்.ஏ ஆளும் திமுக அரசுக்கும், முதலமைச்சருக்கும் சாதகமாகவும், புகழாரம் சூட்டியும் பேசியதால் அதிமுக கட்சியில் இருந்து திமுக கட்சிக்கு தாவி விடுவாரா என அதிமுகவினரிடையே பயத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தருமபுரி எம்பி செந்தில்குமார், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். அப்போது அதிமுகவில் இருந்து எம்எல்ஏக்கள் திமுகவிற்கு வர வாய்ப்பு இருக்கிறதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு; கொங்கு மண்டலத்தில் இருந்து எம்எல்ஏக்கள் வருவார்கள். தருமபுரியில் இருந்து இல்லை என கூறினார்.
நிலைமை இவ்வாறு இருக்க, முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கோட்டையான கோயம்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி, பொது மேடையில் தமிழக அரசையும், ஸ்டாலின் ஆட்சியையும் புகழ்ந்து தள்ளியது ர.ரக்களிடையே மிகுந்த கோவத்தை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் அமைச்சர் வேலுமணியின் கோட்டையில் விரிசல் ஏற்பட போகிறதா என குழப்பங்கள் நீடித்து வந்தது. ஆனால் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூலூர் எம்எல்ஏ கந்தசாமி, சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் நிச்சயமாக அதிமுகவிலிருந்து வேறு எந்த கட்சிக்கும் போகப்போவதில்லை என கூறி இருக்கிறார்.