கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் ஏறி அதிமுக நிர்வாகி இருவர் குடிபோதையில் காலில் விழுந்து பேசவிடாமல் தடுத்து வம்புக்கு இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்ற வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளரும் உளுந்தூர்பேட்டை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான குமரகுரு திமுக ஆட்சி குறித்து வழக்கத்திற்கு மாறாக மிக ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார்.
அதிமுக கூட்டம்
திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வது குறித்து எங்களிடம் பெரிய ரகசியம் இருக்கிறது என்றும் உதயநிதி மற்றும் கனிமொழி மு.க ஸ்டாலின் உள்ளிட்டவர் கூறினார்கள். ஆட்சிக்கு வந்து 15 மாதங்கள் ஆகியும் நீட் தேர்வு குறித்து எந்த ரகசியத்தையும் இதுவரை கூறவில்லை. உதயநிதி ஸ்டாலின் என்ன இது பித்தலாட்டம் என ஒருமையில் பேசிய குமரகுரு, இதுதான் திராவிட மாடல் ஆட்சியா பிராடு மாடல் ஆட்சி என பேசிக்கொண்டிருந்தார்.
குடிமகன்கள்
அப்போது அதிமுக நிர்வாகிகள் இரண்டு பேர் குடித்துவிட்டு மேடையில் ஏறி குமரகுரு காலில் விழுந்து வணங்கி விட்டு மீண்டும் குமரகுரு காலில் விழவந்தனர். அப்போது மேடையில் இருந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் ரத்தத்தில் ஆல்கஹால் கலந்த ரத்தத்தின் ரத்தங்களை தடுத்து நிறுத்தியதால் அவர்கள் இருவரும் மேடையிலேயே கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஒருவழியாக இருவரும் மேடையில் இருந்து இறக்கப்பட்டனர்.
மேடையில் தகராறு
இந்நிலையில் குடிமகன்கள் இருவரும் மீண்டும் மேடைக்கு வந்து தகராறு ஈடுபட்டதால் மனலூப்பேட்டை காவல் துறையினர் விரைந்து வந்து இரண்டு அதிமுக நிர்வாகிகளும் அழைத்துக் கொண்டு போய் வெளியில் விட்டனர். மீண்டும் பேச்சை தொடங்கிய குமரகுரு அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட பல்வேறு திட்ட பணிகளை திமுக ஆட்சி அடியோடு முடக்கிவிட்டது. அம்மா அம்மா உணவகத்தால் எத்தனை ஏழைகள் குறைந்த விலையில் உணவு சாப்பிட்டனர் எனப் பேசினார்.
பெர்பாமென்ஸ்
அப்போது குழந்தை பிறந்த தம்பதி மேடையில் ஏறி தங்கள் குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும் என குமரகுருடன் கேட்டபோது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகன் மேடையில் இருப்பதை பார்த்த குமரகுரு அந்த தம்பதியின் குழந்தைக்கு ஜெயவர்த்தன் என பெயர் சூட்டினார். குழந்தையின் கையில் 2000 ரூபாய் பணத்தை கொடுத்து விட்டு சென்றார். அப்போது மேடையில் இருந்த நிர்வாகிகள் சிலர் ‘நம்மாளுகளே நம்மள பெர்பாமென்ஸ் பண்ண விடமாற்றாங்களே’ என புலம்பித் தள்ளினர்.