சென்னையில் 20ந்தேதிக்கு பிறகு புதிதாக தோண்டும் பணிகள் கிடையாது! மாநகராட்சி தகவல்…

சென்னை: சென்னை மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் செப்டம்பர் 20-ம் தேதிக்கு பிறகு SWDக்கு புதிதாக தோண்டும் பணி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது.

கடந்த ஆண்டு சென்னையில் பெய்த மழை காரணமாக, சாலைகள் வெள்ளக்காடாக மாறின. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், தண்ணீர் செல்லும் வழிகள் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழகஅரசு, சென்னையில் மழைநீர் தேங்காதவாறு, குழு அமைத்து, அவர்களின் அறிக்கை பெற்று, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, சென்னை முழுவதும் மழைநீர் வடிக்கால் கால்வாய், கழிவுநீர் கால்வாய்கள் புணரமைப்பும், புதிய குழாய்கள் பதிக்கும் பணியும் நடைபெற்று வருகின்றன. இதனால் பல சாலைகள் ஒருவழிப்பாதையாக செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக, தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கியதால், பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையும் அடுத்த மாதம் தொடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், ஒப்பந்ததாரர்கள்  பருவமழைக்கு முன் பணிகளை முடிக்க முடியாது என்று தெரிந்திருந்தும் திய குழிகளை தோண்டி வருகின்றனர். இதனால், இழப்பு அதிகரிக்கும் என குற்றம் சாட்டப்படுகிறது.

சென்னையில் மெட்ரோ ரயில் பணிக்காக பெரும்பாலான சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சியும், மழைநீர் வடிகால் உள்பட பல்வேறு பணிகளுக்காக சாலைகளை தோண்டி வருகிறது. இதனால், மக்கள் சொல்லானா துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

இதை கருத்தில்கொண்டு, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலில்,  வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், செப்டம்பர் 20ம் தேதிக்கு பிறகு, மழைக்காலம் முடியும் வரை, புதியதாக சாலைகள் மற்றும் நடைபாதைகளை தோண்டும் பணியை மேற்கொள்ள வேண்டாம் என, ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளது.  அதன்படி, செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு தொடங்கும் பணிகளை மழை வருவதற்குள் முடிக்க முடியாததால், செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு தூர்வாரும் பணியை நிறுத்துமாறு ஒப்பந்ததாரர்களுக்கு உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், தற்போது  நகரில் நடந்து வரும் வடிகால் திட்டங்களுக்கு இது தடை கிடையாது என்றும், அவற்றை ஒப்பந்ததாரர்கள் மேற்கொள்ளலாம் என அனுமதி வழங்கியிருப்பதாகவும்.

சென்னை மாநகரங்களின் பல்வேறு பகுதிகளில், சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதால், சாதாரண மழைக்கே,  சாலைகள் சேறும் சகதியுமாக மாறி வருவதாகவும், அதை அரசு  விரும்பவில்லை என்றும்,  மழைக்காலம் முழுமையாக முடிந்ததும் தோண்டும் பணிகள் அனைத்தும் மீண்டும் தொடங்கும்” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  மழைக்காலத்திற்கு முன் சாலை சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, வெளியேறும் இடங்களில் தண்ணீர் சீராக இருப்பதை உறுதி செய்யுமாறும், ஒப்பந்ததாரர்கள் முடிக்கப்பட்ட SWD பகுதிகளில் மீண்டும் மண்ணைக்கொண்டு சரியாக ஒருங்கிணைக்க வேண்டும். முறையான ஒருங்கிணைப்புக்குப் பிறகு, M20 கான்கிரீட் 15 செ.மீ. போட வேண்டும் என்றும் அறிவிறுத்தி உள்ளது.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் நகரில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளில் 80% வரை மாநகராட்சி நிறைவு செய்துள்ளது. கொசஸ்தலையாறு வடிநில திட்டங்களுக்கான டெண்டர் கால அவகாசம் 2024 வரை உள்ளதால், சிறிது அவகாசம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.