சண்டிகர்: பஞ்சாபின் மொகாலியில் சண்டிகர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த தனியார் பல்கலைக்கழக விடுதியில் ஏராளமான மாணவிகள் தங்கி படிக்கின்றனர். எம்.பி.ஏ. முதலாம் ஆண்டு படிக்கும் ஒருமாணவி 60 மாணவிகள் குளிக்கும்போது வீடியோ எடுத்து தனதுஆண் நண்பருக்கு அனுப்பியதாகவும் அவர் அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக விடுதி வார்டன் விசாரணை நடத்தி, சக மாணவிகளை வீடியோ எடுத்த எம்.பி.ஏ. மாணவியை பிடித்தார். அவரிடம் விசாரித்தபோது உண்மையை ஒப்புக் கொண்டார்.
தகவல் அறிந்து சண்டிகர் பல்கலைக்கழக வளாகத்தில் சனிக்கிழமை நள்ளிரவில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீஸ் உயரதிகாரிகள் விரைந்து வந்து மாணவ, மாணவிகளை சமாதானப்படுத்தினர்.
இதுகுறித்து மாணவிகள் வட்டாரங்கள் கூறியதாவது:
பல்கலைக்கழக விடுதியின் பி, சி, டி பிளாக்கை சேர்ந்த சுமார் 60 மாணவிகள் குளிக்கும்போது முதலாம் ஆண்டு மாணவி ஒருவர்வீடியோ எடுத்து இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த இளைஞருக்கு அனுப்பி உள்ளார். அந்த நபர்தான்சமூக வலைதளத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார். பாதிக்கப்பட்ட 8 மாணவிகள் தற்கொலைக்கு முயன்று உள்ளனர்.
மாணவி, ஆண் நண்பர் கைது
பல்கலைக்கழக நிர்வாகமும் போலீஸாரும் உண்மையை மூடிமறைக்க முயற்சி செய்கின்றனர்.வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவுவதை தடுக்க வேண்டும். தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
மொகாலி போலீஸ் எஸ்.எஸ்.பி. விவேக் சோனி கூறும்போது, “இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட மாணவியை கைதுசெய்துள்ளோம். அவரது செல்போன், லேப்டாப்பை பறிமுதல் செய்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். முதல்கட்ட விசாரணையில் ஒரு பெண்ணின் வீடியோ மட்டுமே இருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த வீடியோ, கைது செய்யப்பட்ட பெண்ணின் வீடியோ ஆகும். இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம். அந்த மாணவியின் ஆண் நண்பரான சன்னியை இமாச்சல போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை அழைத்து வந்து விசாரணை நடத்த உள் ளோம்” என்றார்.
உயர்நிலை விசாரணைக்கு உத்தரவு
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறும்போது, “சண்டிகர் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன். யார் தவறு இழைத்திருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எங்கள் மகள்களின் கண்ணியத்தை காப்போம்” என்றார்.
டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவால் ட்விட்டரில்வெளியிட்ட பதிவில், “இது மிக முக்கிய பிரச்சினை. பாதிக்கப்பட்டவர்கள் மனதைரியத்துடன் இருக்கவேண்டுகிறேன். நாங்கள் உங்களோடு இருக்கிறோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “சண்டிகர் பல்கலைக்கழக வீடியோக்களை சமூக வலைதளங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நாம் பொறுப்புள்ள சமுதாயமாக செயல்பட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். மாணவ, மாணவிகளின் போராட்டம் வலுத்து வருவதால் இன்றும் நாளையும் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருக்கிறது.