கடந்த ஆண்டு ஜூலை மாதம் 26-ம் தேதி மும்பை அருகிலுள்ள நாலாசோபாரா கடற்கரையில் சூட்கேஸில் பெண் ஒருவரின் தலையில்லாத உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த உடலை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். அவர் யார் என்பது குறித்து விசாரிக்க போலீஸார் 6 தனிப்படைகளை அமைத்திருந்தனர். கொலைசெய்யப்பட்ட பெண்ணின் உடலில் இருந்த மருதானியை பார்த்து அவர் ஒரு முஸ்லிமாக இருக்கவேண்டும் என்று போலீஸார் உறுதி செய்தனர். ஆனாலும் ஓராண்டுக்கு மேலாக விசாரித்தும் அந்தப் பெண் குறித்து எந்தவிதத் தகவலும் இல்லாமல் இருந்தது. முக்கிய ரயில் நிலையங்கள் அருகில் 150-க்கும் மேற்பட்ட பேனர்கள்கூட போலீஸார் வைத்துப்பார்த்தனர். அதிலும் துப்பு துலங்கவில்லை.
அருகிலுள்ள போலீஸ் நிலையம் எதிலும் பெண் காணாமல் போனதாக புகார் எதுவும் பதிவாகவில்லை. இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 29-ம் தேதி சானியா என்ற பெண்ணை காணவில்லை என்று கூறி அவர் உறவினர்கள் போலீஸில் புகார் செய்தனர். உடனே கடந்த ஆண்டு ஜூலை மாதம் கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் உடலின் புகைப்படங்களை புகார் செய்தவர்களிடம் அடையாளம் காட்டினர். அதோடு போலீஸார் அந்தப் பெண்ணின் டி.என்.ஏ மாதிரியை சேமித்து வைத்திருந்தனர். புகார் செய்த சானியாவின் உறவினர்கள் முதலில் நாலாசோபாராவில் உள்ள சானியாவின் கணவர் வீட்டுக்குச் சென்றபோது அந்த வீட்டை விற்பனை செய்துவிட்டு வேறு வீட்டுக்குச் சென்றிருந்தனர்.
சானியாவின் கணவர் ஆசிப் போன் செய்தபோது போனை எடுக்கவே இல்லை. இதனால் ஆசிப் தாயாருக்கு போன் செய்தபோது அவர் போன் எடுத்துப் பேசினார். அவர்கள் தாங்கள் பழைய வீட்டை விற்றுவிட்டு மும்ப்ரா என்ற இடத்துக்கு வந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அங்கு சென்றபோது சானியாவை காணவில்லை. சானியாவின் மகளை ஆசிப் அழைத்து வந்தார். சானியா குறித்து கேட்டதற்கு, அவர் யாருடனோ ஓடிப்போய்விட்டதாகவும், ஓராண்டாக காணவில்லை என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்தே சானியாவின் உறவினர்கள் நாலாசோபாரா போலீஸில் புகார் செய்தனர். அதனடிப்படையில் போலீஸார் சானியாவின் கணவர், அவர்களின் மகள் ஆகியோரின் டி.என்.ஏ மாதிரியை சானியாவின் டி.என்.ஏ-வுடன் ஒப்பிட்டுப்பார்த்த போது ஒத்துப்போனது. உடனே முதலில் சானியாவின் கணவரை கைதுசெய்து விசாரித்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி சஞ்சய் குமார் கூறுகையில், “சானியாவின் மகளை ஆசிப் தன்னுடைய குழந்தை இல்லாத சகோதரியிடம் கொடுக்கும்படி கூறியிருக்கிறார். ஆனால் சானியா அதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். சானியாவின் கணவர் வெளிநாட்டில் இருந்தபோதே சானியாவிடமிருந்து குழந்தையை பறிக்க ஆசிப் பெற்றோர் முயன்றனர். ஆசிப் கடந்த ஆண்டு ஜூலை 21-ம் தேதி இந்தியா திரும்பினார். அன்றைய தினமே அதாவது பக்ரீத் பண்டிகை தினத்தன்று சானியாவை ஆசிப் அவர் குடும்பத்தினர் சேர்ந்து கை, கால்களை கட்டி தண்ணீர் தொட்டிக்குள் போட்டிருக்கின்றனர். பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றிருக்கின்றனர்.
பின்னர் ஆசிப் தன் மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்திருக்கிறார். ஆனால் அவரால் முடியவில்லை. இதனால் ஆசிப் தந்தை இந்தக் காரியத்தை செய்து முடித்தார். போலீஸார் தலையைக் கண்டுபிடித்தால் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக அவர் தலையில் இருந்த முடியை அப்புறப்படுத்தியிருக்கின்றனர். அதோடு அவர் முகத்திலிருந்த ஒரு மச்சத்தைக்கூட அகற்றியிருக்கின்றனர். பின்னர் ஆசிப் தன் மைத்துனர் யூசுப்பை வரவழைத்து உடலை சூட்கேஸில் வைத்து கடற்கரையில் கொண்டு போய் போட்டிருக்கிறார். தலையை பாலத்திலிருந்து கடலில் தூக்கி போட்டிருக்கின்றனர். மாலையில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடியிருக்கின்றனர். கொலைசெய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி இன்னும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்தக் கொலை தொடர்பாக ஆசிப், அவர் மூத்த சகோதரர், பெற்றோர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.”