வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அயோத்தி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு அவரின் தொண்டர் ஒருவர் கோவில் கட்டிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. இது ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் அயோத்தியில் உள்ள மவுரியா கா பூர்வா என்னும் கிராமத்தில் 10ம் வகுப்பு மட்டுமே படித்துள்ள 32 வயதான பிரபாகர் மவுரியா என்பவர் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டியுள்ளார். கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ல் ராமர் கோவில் கட்டுமானத்திற்கான பூமி பூஜையில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியபோதே, மவுரியாவும் இரு சிற்பிகளுடன் யோகி ஆதித்யநாத் கோவிலை கட்ட துவங்கியுள்ளார்.
தன்னை ஒரு ‘யோகி தொண்டன்’ என்றும், கட்சிக்காக ஏராளமான பாடல்களை உருவாக்கிய யூடியூபர் என்றும் அறிமுகப்படுத்திக்கொள்ளும் மவுரியா, யார் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வழி செய்கிறாரோ, அவர்களுக்கு கோவில் கட்டுவதாக தனக்கு தானே உறுதியளித்துள்ளதால், யோகி ஆதித்யநாத்துக்கு கோவில் கட்டியதாக கூறியுள்ளார். மொத்தம் 20 அடி உயரமுள்ள இந்த கோவிலில் யோகியின் உருவத்திலான சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. அச்சிலையின் கையில் வில்லும், அம்புகளும் இருக்க, சிலையின் தலைக்கு பின்னால் சூரிய ஒளி வட்டம் இருப்பது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மவுரியா கூறுகையில், ‘யோகி தனது அம்புகளை அனைத்து வகையான குற்றங்கள் மற்றும் ஊழல்கள் மீது குறிவைக்கிறார். எனவே இதுதான் சரியான சின்னம்’ என்றார். கோவில் கட்டுவதற்காக மொத்தம் 7 லட்சம் செலவிட்டுள்ள மவுரியா, இந்த தொகையை தனது யூடியூப் சேனலின் மூலம் பெற்றதாக கூறியுள்ளார். கோவிலுக்கு தினமும் இருமுறை மவுரியா, தானே பூஜை செய்து வழிபாடு செய்கிறார். மேலும், வழிபாடு நடத்துகையில், ‘ஜெய், ஜெய் யோகி பாபா’ என்ற தானே இசையமைத்த பாடல்களை பாடி ஆரத்தி எடுக்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement