விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்தத் தொடர் கிட்டத்தட்ட 1000 எபிசோடுகளைக் கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்தத் தொடரில் ‘முல்லை’ என்கிற கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி நடித்துக் கொண்டிருந்தார். தற்போது காவ்யா அந்தத் தொடரில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், காவ்யாவும் சரி சேனல் தரப்பும் சரி அது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்களை வெளியிடவில்லை. இந்நிலையில், காவ்யாவை தொடர்பு கொண்டு பேசினோம். ” இன்னும் அதிகாரப்பூர்வமாக நான் எதுவும் இது பற்றி சொல்ல முடியாது. ஆனா, சமீபத்தில் படங்களில் கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கேன். நான் நடிச்ச ரெண்டு படங்களும் ரிலீஸூக்காக வெயிட்டிங்! அந்தப் படங்களுக்குப் பிறகு தொடர்ந்து நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கலாம் என்கிற முடிவில் இருக்கிறேன்” என்றவரிடம் அவர் படித்த கல்லூரிக்குச் சென்று நேற்று பட்டம் பெற்றது குறித்துக் கேட்கவும் புன்னகைக்கிறார்.
காலேஜ்ல நான் எல்லார்கிட்டேயும் நார்மலாகத்தான் இருந்தேன். ஆனா, அவங்க எல்லாரும் என்னைப் பார்த்த விதம் வேற மாதிரி இருந்துச்சு. ஆர்க்கிடெக்ட் ஆகணும்னு ஆசைப்பட்டுதான் அந்தத் துறையை தேர்ந்தெடுத்தேன். ஆர்க்கிடெக்ட் என்கிற பட்டத்தை கையில் வாங்கிய தருணம் ரொம்பவே சந்தோஷமாகவும், பெருமையாகவும் இருந்தது.
நார்மலான ஸ்டூடண்ட் ஆக கல்லூரிக்குள் நுழைஞ்சேன். அதே கல்லூரியில் பலருக்கும் பரிச்சயமான முகமா பட்டம் வாங்கப் போனது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அடுத்து மேற்படிப்பு படிக்கணும் என்கிற எண்ணமெல்லாம் இல்லைங்க. வெள்ளித்திரையில் நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிக்கணும் என்பது மட்டும்தான் இலக்கு!” என்றார்.