கடந்த சில வாரங்களாக புதுச்சேரியில் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டு ஏராளமானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு பள்ளிகளுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவைக்கு அருகில் உள்ள தமிழக மாவட்டமான கடலூர் மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இன்று காலை முதல் கடலூர் அரசு மருத்துவமனையில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் சிகிச்சை பெற காத்திருக்கின்றனர். வயது வித்தியாசம் இல்லாமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
கடலூர் அரசு மருத்துவமனை மட்டுமல்லாமல் மாவட்டம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இதே போல் சிகிச்சைக்காக மக்கள் அதிக அளவில் வருகின்றனர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் வலி, உடல் சோர்வு ஏற்படுவதுடன் சளி இருமல் உள்ளிட்டவையும் ஏற்படுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். கைக்குழந்தைகளுடனும் ஏராளமானோர் மருத்துவமனை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இது காலநிலை மாற்றத்தால் ஏற்படும் காய்ச்சல் என மருத்துவர்கள் தெரிவித்தாலும் கொரோனா பீதி காரணமாகவும் ஏராளமானோர் மருத்துவமனை நோக்கி வர துவங்கியுள்ளனர்.
இவர்களுக்கு தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில் கடலூர் மாவட்டம் முழுவதும் கிராம பகுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை மேலோங்கி உள்ளது. நகரப் பகுதிகளை விட கிராமப் பகுதிகளில் இந்த காய்ச்சல் மிக வேகமாக பரவி வருவதால் சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்களும் ஏராளமானோர் தொடர்ந்து மருத்துவமனை நோக்கி வந்து கொண்டிருப்பதால் பள்ளிகளில் காய்ச்சல் காரணமாக இருப்பவர்களை அனுமதிக்க கூடாது எனவும் பொது சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.