கோவிட் -19 தொற்று பாதிப்பிற்குள்ளாகி, பின்னர் சிகிச்சை பெற்று குணமடைந்த 65 வயதிற்கு மேலானவர்களுக்கு, அல்சைமர் நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சி ஒன்று கண்டுபிடித்துள்ளது.
ஆல்சைமர் நோய் (Alzheimer disease) என்பது, நரம்பியல் சிதைவுகளால் ஏற்படக்கூடியது. இது அறிவாற்றல் இழப்பு அல்லது மறதிநோயின் பொதுவான வடிவமாகும். அல்சைமர் நோய் பற்றி வெளியான ஆய்வுக் கட்டுரையின்படி, கோவிட் -19 பாதிப்பில் இருந்து குணமான அதே வருடத்தில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் 50% – 80% பேர் வரை அல்சைமர் நோயால் தாக்கப்பட்ட அபாயம் கண்டறியப்பட்டுள்ளது.
கோவிட் -19 பாதிப்புக்கு ஆளான பின், 65 வயதுக்கு மேற்பட்ட 85% பெண்களுக்கு இந்த நோய் ஏற்படும் சாத்தியக்கூறுகள் இருந்ததாக அந்த ஆய்வு கூறுகிறது. அதோடு, கடந்த ஒரு வருடத்தில் இதன் பாதிப்பு 0.35%ல் இருந்து 0.68% ஆக, இரு மடங்காக அதிகரித்துள்ளது.
அதே நேரம், கோவிட் – 19 பாதிப்பு, அடுத்த கட்டமாக அல்சைமர் நோய் தாக்குதலாக மாறுகிறதா என்பது பற்றி தெளிவாகத் தெரியவில்லை என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி 2020 மற்றும் மே 2021 ஆகிய காலக்கட்டத்தில் சிகிச்சை பெற்ற 65 வயதுக்கு மேற்பட்ட 6.2 மில்லியன் நோயாளிகளின் மருத்துவ அறிக்கைகளில், அல்சைமர் நோய் தாக்கிய அறிகுறிகள் முன்னர் தென்படவில்லை என அந்த ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.
இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் பமீலா டேவிஸ் கூறுகையில்,“இந்த அல்சைமர் நோய் ஏற்பட கோவிட் -19 நோய்த்தொற்று மற்றும் அதனால் ஏற்படும் வீக்கம் கூட காரணிகளாக இருக்கலாம். மேலும் சார்ஸ் மற்றும் கோவிட் -19 நரம்பு மண்டலங்களை பாதிப்பதால், மற்ற நோய் தொற்றுகள் எளிதாக பரவ வாய்ப்புள்ளதா என்றும் ஆராய்ச்சி செய்து வருகிறோம்” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், “அல்சைமர் நோய் மிகவும் ஆபத்தானது மற்றும் சவாலானதும் கூட. உயர் ரத்த அழுத்தம், இருதய நோய், உடல் பருமன் மற்றும் உட்கார்ந்தபடியே வேலை பார்த்தல் ஆகியவை அல்சைமர் நோயை ஏற்படுத்தும் காரணிகள். இவற்றை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். எனவே, சிகிச்சை பெறுபவர்களை தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
எனவே, கோவிட் -19 தொற்றில் இருந்து மீண்ட 65 வயதுக்கு மேற்பட்டோர், வேறு ஏதேனும் நோய் தொடர்பான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது சிறந்தது என்கின்றனர் மருத்துவர்கள்.