Tamil Nadu News: சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை அமைக்கப்பட்டிருக்கும் ரயில் பாதை தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான வழித்தடம் ஆகும்.
இந்த வழித்தடத்தில் மூலமாக செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, நாகர்கோவில் என தமிழ்நாட்டின் முக்கியமான மாவட்டங்களுக்கு ரயிலின் மூலம் பயணிக்கலாம்.
இந்த வழித்தடத்தில் செல்வதற்காக சென்னை எழும்பூரில் இருந்து 28 விரைவு ரயில்களும், பிற மாநிலங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு, 10க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
பயணிகளின் தேவை அதிகரித்ததனால், அதிகமான ரயில் சேவைகள் அவ்வழியில் தேவைப்படுகிறது. ஆனால் அதற்கேற்ற போதிய ரயில் பாதைகள் இல்லாததால், கூடுதல் ரயில்கள் இயக்க முடியாத சூழல், பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இதற்கிடையே, 1998ஆம் ஆண்டு சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான, 739 கிலோ மீட்டர் துாரத்திற்கு, இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டது. இந்த வழித்தடத்தை மின்மயத்துடன், இரட்டை வழிப் பாதையாக மாற்றுவதற்கான பணிகள் தொடர்ந்து நடக்கின்றன.
2018ஆம் ஆண்டு, சென்னையில் இருந்து மதுரை வரை இரட்டை பாதை அமைக்கப்பட்டு தற்போது இயங்கிக்கொண்டு இருக்கிறது.
இதையடுத்து, 2022ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான இரட்டை பாதை அமைக்கும் பணிகளை நிறைவு செய்ய தெற்கு ரயில்வே திட்டமிட்டிருந்தது.
நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் மற்றும் மணல் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால், இந்த பணிகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறுகிறார்கள்.
அடுத்தாண்டு மார்ச்சுக்குள் இப்பாதை பணிகள் முடியாதுஎன்பதனால், 2024ல் தான் முடிக்க முடியும் என்று கூறுகிறார்கள். இந்த பணிகள் முடியும்போது, தென் மாவட்டங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்க முடியும் என்று தெரிவிக்கிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil