சென்னை: இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி மற்றும் அதிதி சங்கர் நடித்திருந்த திரைப்படம் விருமன்.
இந்தப் படக்குழுவினர் செய்த விளம்பரத்தின் காரணமாக படம் மிகவும் வெற்றிகரமாக ஓடியது.
இந்நிலையில் விருமன் திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதியுள்ள கவிஞர் சினேகன் அந்தப் படம் தொடர்பாக தன்னுடைய அதிருப்தியை அந்த சமயத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
சூர்யா தயாரிப்பு
கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடித்த விருமன் படத்தையும் சூர்யாதான் தயாரித்திருந்தார். இந்தப் படத்திற்கு மதுரை சென்னை என்று மாறி மாறி நிகழ்ச்சிகள் நடத்தி விளம்பரம் செய்தது மட்டுமல்லாமல் திரைப்படம் வெளியான பின்பும் நடிகர் கார்த்தி மற்றும் நடிகை அதிதி சங்கர் தொடர்ச்சியாக பேட்டிகள் கொடுத்து ரசிகர்களை அந்த படத்தை பற்றியே நினைக்க வைத்தார்கள் என்றே சொல்லலாம்.
அதிதி சங்கர்
இந்தப் படத்தின் முக்கிய அம்சமாக கருதப்பட்டவர் இயக்குநர் சங்கரின் மகள் அதிதி. அவர் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி வந்ததிலிருந்தே விருமன் படத்திற்கு எதிர்பார்ப்பு உண்டானது. அதுவும் இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகு இணையதளம் முழுக்க அதிதி பற்றிய பேச்சுக்களாகத்தான் இருந்தது. இடையில் பாடகி ராஜலக்ஷ்மி வாய்ப்பை தட்டிப் பறித்து தான் ஒரு பாடலை பாடிவிட்டார் அதிதி என்ற சர்ச்சையிலும் சிக்கினார்.
சினேகன் அதிருப்தி
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சினேகன் பேசும்பொழுது விருமன் திரைப்படத்தில் ஒற்றைக் காட்சியில் நடித்தவர்களை கூட மேடையில் ஏற்றி அங்கீகாரம் கொடுத்தார்கள். ஆனால் ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடல்கள் எழுதியுள்ள பாடல் ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் கொடுக்க தவறி விட்டார்கள். எங்களை அழைக்கக்கூட இல்லை என்று கூறியுள்ளார். சினேகன் மனம் புரிந்து கொண்டு பட குழுவினர் நடத்திய இன்னொரு விழாவில் சென்னையில் அவரை கௌரவ படுத்தினர். நல்லுரவு நீடித்தது.
சினேகன் பெருந்தன்மை
தயாரிப்பாளர் கே.ராஜன் தயாரிப்பாளர்களுக்காக பல மேடைகளில் பேசுகிறார். நானும் அதுபோல பாடலாசிரியர்களுக்காக பேச விருப்பப்படுகிறேன். இப்போது அனைவரும் அனைத்து வேலைகளும் செய்வதால் பாடலாசிரியர்கள் என்ற ஒரு இனம் குறைந்து கொண்டே வருகின்றது. அவர்களுக்கான அங்கீகாரமும் கொடுக்கப்படுவதில்லை. இசை வெளியீட்டு விழாவிலேயே கொடுக்கவில்லை என்றால் அவர்களது நிலைமையை யோசித்துப் பார்க்க வேண்டும். என்னுடைய பல படங்களில் புதிதாக பாடலாசிரியர்கள் பாடல்கள் எழுதி இருந்தால் அவர்களை விட்டுவிட்டு எனக்கு மட்டும் மேடையில் நாற்காலி போடுவார்கள். பல தருணங்களில் அவர்களுக்கும் நாற்காலி போடுங்கள் இல்லை என்றால் அவர்களுடன் சேர்ந்து நானும் கீழே அமர்ந்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறேன் என்று சினேகன் அந்த நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.