புதுச்சேரி: சென்டாக் நிர்வாகம் வழக்கத்திற்கு மாறாக, கலை, அறிவியல் படிப்பிற்கு முதலில் கவுன்சிலிங் நடத்தி சீட் ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள், சேர்க்கை நடைமுறை தெரியாமல் கண்ணை கட்டி காட்டில் விட்டதை போன்று தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி கல்லுாரிகளில் கலை, அறிவியல் படிப்புகளுக்கு ‘சென்டாக்’ மூலம் விண்ணப்பித்த மாணவர்களுக்கு முதல் கட்ட கவுன்சிலிங்கில் ‘சீட்’ ஒதுக்கப்பட் டுள்ளது. கலை அறிவியல் படிப்புகளில் மொத்தமுள்ள 4,260 இடங்களில் 4,125 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. 135 இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
இடம் கிடைத்த மாணவர்கள் வரும் 27ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.வழக்கமாக, அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் முதலில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம் உள்ளிட்ட படிப்பினை தேர்வு செய்வர்.
மருத்துவ படிப்புகளில் சீட் கிடைக்காவிட்டால் அடுத்து, இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில் படிப்புகளின் பக்கம் திரும்புவர்.ஒருவேளை இன்ஜினியரிங் சீட்டும் கிடைக்க வில்லையென்றால், மனதை தேற்றிக்கொண்டு கடைசியாக கலை, அறிவியல் கல்லுாரிகளில் சேருவர்.அதற்கேற்ப முதலில் எம்.பி.பி.எஸ்., கவுன்சிலிங் நடத்தப்படும். அடுத்து இன்ஜினியரிங் கவுன்சிலிங்கும், கடைசியாக கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்தப்படுவது வழக்கம்.
இந்தாண்டு வழக்கத்திற்கு மாறாக, திடீரென கலை அறிவியல் படிப்பிற்கு முதலில் கவுன்சிலிங் மூலம் சீட் ஒதுக்கப்பட்டுள்ளது.இது, ஒரே நேரத்தில் பல்வேறு படிப்புகளுக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.சேர்க்கை நடைமுறை தெரியாமல், கண்ணைக் கட்டி காட்டில் விட்டதை போன்று பெற்றோர்களும், மாணவர்களும் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பெற்றோர்கள் கூறியதாவது:
பல மாணவர்கள் கலை அறிவியல் படிப்பிற்கும், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்படிப்பிற்கும் ஒரே நேரத்தில் விண்ணப்பித்துள்ளனர்.கலை, அறிவியல் படிப்பில் சீட் கிடைத்த மாணவர்கள், வரும் 27ம் தேதிக்குள் கல்லுாரியில் சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அப்படி சேர்ந்த மாணவர்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு விடையில்லை.
உதாரணமாக, ஒரு மாணவருக்கு கலை, அறிவியல் கவுன்சிலிங்கில் பி.எஸ்சி., இயற்பியல் படிப்பில் சீட் கிடைத்து கல்லுாரியில் சேர்ந்து விட்டார் என்றால், அந்த மாணவர் பெயர் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கிற்கு எடுத்துக் கொள்ளப்படுமா, சீட் ஒதுக்கப்படுமா என சென்டாக் தெளிவுபடுத்தவில்லை.
அடுத்து வர உள்ள இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சீட் கிடைத்தால், ஏற்கனவே சேர்ந்த கலை, அறிவியல் படிப்பில் சேர்ந்த சீட் தானாக கேன்சல் ஆகிவிடுமா என்பது குறித்தும் விளக்கம் இல்லை.இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் சீட் கிடைத்த பிறகு, கலை அறிவியல் படிப்பில் சேர்ந்ததற்கு கட்டிய பணம் திரும்ப கிடைக்குமா, அதற்கான வழிமுறைகள் என்ன என்பதற்கும் பதில் இல்லை.
வழக்கம்போல் சென்டாக் முதல் கட்ட கவுன்சிலிங், இரண்டாம் கவுன்சிலிங், பிறகு, மாப் அப் கவுன்சிலிங் நடத்தப்படும் என்று மட்டுமே கூறியுள்ளது.கவுன்சிலிங் நடைமுறைகள் தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே கலை, அறிவியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் நடைமுறைகளை சென்டாக் தெளிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
சென்டாக் அதிகாரிகள் சொல்வது என்ன?
சென்டாக் அதிகாரிகள் கூறியதாவது:
கவுன்சிலிங் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளன. ஒரு மாணவர் ஒரு சீட்டினை மட்டுமே ஒரே நேரத்தில் வைத்திருக்க முடியும்.இந்த விஷயத்தில் மாணவர்கள் தெளிவாக முடிவெடுக்க வேண்டும்.
கலை – அறிவியல் படிப்பில் சீட் கிடைத்த மாணவர்கள், அதில் உறுதியாக சேர முடிவு எடுத்திருந்தால், இன்ஜினியரிங் கவுன்சிலிங் முன்னுரிமையை நீக்கி, அதில் இருந்து வெளியேற வேண்டும். இல்லையெனில் இன்ஜினியரிங் கவுன்சிலிங் சீட் ஒதுக்கும்போது. ஏற்கனவே கலை அறிவியல் கல்லுாரி சேர்ந்திருந்தால் தானாகவே அந்த சீட் கேன்சல் ஆகிவிடும்.ஓரிரு தினங்களில் இது தொடர்பாக வழிமுறைகள் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்