தெஹ்ரான்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்து போலீசார் தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த இளம்பெண் இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பெண்கள் ஹிஜாப்பையு எரித்தும், தலைமுடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பெண்கள் தலைமுடியை வெட்டு போராடுவதன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்லாமிய நாடான ஈரானில் பெண்களுக்கு கடுமையான உடை கட்டுப்பாட்டு முறை நடைமுறையில் உள்ளது. இங்கு 7 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் முதல் பெண்கள் அனைவரும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஈரானில் கடும் எதிர்ப்பு உள்ளது. ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கொடூர தாக்குதல்
இதற்கு மத்தியில் தான் சில நாட்களுக்கு முன்பு குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள சாகிஸ் கிராமத்தை சேர்ந்த மாஷா அமினி (வயது 22) என்பவர் தலைநகர் தெஹ்ரானுககு வந்து கொண்டிருந்தார். அப்போது பெண்கள் பொதுவெளியில் ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் வகையிலான நீதிநெறியை கடைப்பிடிக்க செய்யும் கலாச்சார போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மாஷா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை எனக்கூறி அவரை தாக்கிய போலீசார் கைது செய்தனர். போலீஸ் வாகனத்தில் ஏற்றி கடுமையாக தாக்கினர். இதனால் அவர் மயங்கினர்.
கோமா நிலையில் இளம்பெண் இறப்பு
உடனடியாக மாஷா அமினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கோமா நிலைக்கு சென்றது தெரியவந்தது. அதன்பிறகு அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பிற மனித உரிமை அமைப்புகள் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். ஆனால் உடல்நலக்குறைவால் அவர் இறந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதனை யாரும் நம்பவில்லை. மேலும் ஏற்கனவே ஈரானில் ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு பெண்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் இந்த செயல் அவர்களை கோபத்தின் உச்சத்துக்கு கொண்டு சென்றது.
தலைமுடியை வெட்டி போராட்டம்
இதனால் பெண்கள் அனைவரும் வீதிகளில் இறங்கி போராட துவங்கி உள்ளனர். அரசுக்கு எதிராகவும், ஹிஜாப் சட்டத்துக்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபவர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி கலைத்து வருகின்றனர். மேலும் பொதுவெளியில் ஹிஜாப்பை தீயிட்டு எரித்து பெண்கள் ஆக்ரோஷத்தை வெளியிட்டு வருகின்றனர். மேலும் பல பெண்கள் தங்களின் தலைமுடியை வெட்டி எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் பதிவிட்டு எதிர்ப்பை காட்டுகின்றனர்.
காரணம் என்ன?
அதாவது ஹிஜாபை முறையாக அணியாததால் தலைமுடி வெளியே தெரிந்ததாக கூறி தான் மாஷா அமினியை போலீசார் தாக்கியுள்ளனர். அதில் தான் அவர் இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் பெண்கள் தங்களின் தலைமுடியை வெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதோடு ஈரானின் ஷரியா (இஸ்லாமிய) சட்டத்தின்கீழ் பெண்கள் தங்கள் தலைமுடியை மறைக்க வேண்டும். நீண்ட தளர்வான ஆடைகளை மட்டுமே அணிய வேண்டும் என கூறப்பட்டுள்ளதை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.