தஞ்சை: கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் அருகே கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் நீரேற்று நிலைய குழாய் செல்லும் பாலத்தின் தூண் இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே அணைக்கரையில் கொள்ளிடம் ஆறு உள்ளது. இந்த கொள்ளிடம் ஆற்றின் நீராதாரத்தை கொண்டு வேளாங்கண்ணிக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக திருப்பனந்தாள் அருகே அணைக்கரை வாண்டையார் இருப்பில் கொள்ளிடம் ஆற்றில் குடிநீர் சேகரிக்கும் கிணற்றுடன் குடிநீர் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு அதிலிருந்து குடிநீர் விநியோகத்துக்காக குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆற்றிலிருந்து கரை வரை தூண்களுடன் சிறிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த ஒரு மாதமாக பெய்த பலத்த மழையால் மேட்டூருக்கு அதிகளவில் தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் அப்படியே காவிரியில் திறந்து விடப்பட்டது. இதையடுத்து கொள்ளிடம் ஆற்றில் கடந்த இரண்டு மாதமாக 1 லட்சம் கன அடிக்கும் மேலாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக 2 லட்சம் வரை கொள்ளிடத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. கடந்த ஒரு மாதமாக சென்ற வெள்ளநீரால் கொள்ளிடம் ஆற்றில் அமைக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி கூட்டு குடிநீர் குழாய் பால தூண்களில் மண் அரிப்பு ஏற்பட்டு தூண்கள் வலுவிழந்து காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் இந்த பாலத்தின் ஒரு தூண் இடிந்தது. இதனால் சுமார் 50 அடி நீளத்துக்கு குடிநீர் குழாய் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது. ஆனால் குடிநீர் குழாய்க்கு பெரிய அளவிலான சேதம் ஏற்படவில்லை. லேசான குடிநீர் கசிவு மட்டும் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாகை, வேளாங்கண்ணி, முத்துப்பேட்டை மற்றும் வழியில் உள்ள பேரூராட்சி, கிராம ஊராட்சிகளுக்கு குடிநீர் விநியோகத்தில் 10 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து இன்று காலை கொள்ளிடம் ஆற்றுக்கு வந்து தூண் சரிந்த இடத்தை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் பார்வையிட்டனர். பின்னர் அவர்கள் கூறுகையில், குடிநீர் சேகரிப்பு கிணற்றிலிருந்து மோட்டார் மூலம் வெளியேற்றப்படும் குடிநீரில் கசிவு ஏற்பட்டுள்ளதால் முழுமையான தண்ணீர் குழாய் மூலம் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்தை நிறுத்தி விட்டு பாலம் மற்றும் குடிநீர் குழாய் சீரமைக்கும் பணி விரைவில் துவங்கப்படும். மேலும் ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள பாலம் தாங்கு கட்டைகளின் ஸ்திரத்தன்மை குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.