மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு…

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் உயிலை வெளியிட வலியுறுத்தி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.

சென்னை மாங்காட்டைச் சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியரான சவுந்தரராஜன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், உண்ணாவிரதமர் இருக்க அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில்,  தமிழக முதலமைச்சராக இருந்த மறைந்த  ஜெயலலிதா, தன்னை அழைத்து திருவேற்காடு, மாங்காடு, கரையாஞ் சாவடி, கோயம்பேடு பகுதிகளில் உள்ள நிலங்களில் வீடுகள் ஏற்படுத்தும்படி கூறியதாகவும், அதன் அடிப்படையில் வீடுகள் அமைக்க நடவடிக்கை எடுத்து, 125 வீடுகளுக்கு முன் பணமாக 30 லட்சம் ரூபாய் வசூலித்து கொடுத்ததாக தெரிவித்துள்ளதுடன், தான் ஜெயலலிதாவிடம் பணம் கொடுத்தது  சசிகலாவுக்கும், ஜெயலலிதாவின் உதவியாளரான ரமேஷ் என்பவருக்கும் தெரியும். ஆனால்,  ஜெயலலிதா மறைவுக்குப் பின், பெங்களூரு சென்ற வழியில் தன்னை சந்தித்த சசிகலா, தான் கொடுத்த பணத்துக்கு பதிலாக  சில சொத்துக்களை தனது பெயருக்கு ஜெயலலிதா உயில் எழுதி வைத்துள்ளதாகக் கூறியதாகவும், ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா தற்போது தன்னை சந்திக்க மறுப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான தான் பலமுறை அதிகாரிகளிடம்   எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், ஜெயலலிதாவின் சமாதியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கோரி காவல் துறைக்கு மனு அளித்ததாகவும், அந்த மனுவை பரிசீலித்து அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், உண்ணாவிரதத்துக்கு அனுமதி கோரி மனுதாரர் விண்ணப்பித்துள்ளாரா? என்பதை அறிந்து தெரிவிக்கும்படி காவல் துறை தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.